தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் சிவாஜி கணேசன், தனது சினிமா வாழ்க்கையில் ஒருமுறை கூட தாமதமாக வந்ததில்லை. அதேபோல் சரியான நேரத்திற்கு மேக்கப்புடன் வந்துவிடுவார் என்று பலரும் சொல்ல கேட்டிருக்கிறோம். ஆனால் படப்பிடிப்புக்கு வருவது குறித்து பந்தையம் வைத்து நடிகை ஜெயல்லிதாவிடம் சிவாஜி தோற்றுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
1967-ம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான படம் கந்தன் கருணை. சிவக்குமார் முருகன் வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில், ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்தை கண்ணாசனின் அண்ணன் ஏ.எல். சீனிவாசன் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கான பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார்.
இந்த படத்தில் வரும் ‘’திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்’’ என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஒரு பாடலாக இன்றும் நிலைத்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது, ஒருநாள் நாளை காலை முக்கிய காட்சி ஒன்றை படமாக்க இயக்குனர் ஏ.பி.நாகராஜன் முடிவு செய்து அதை சிவாஜியிடம் சொல்ல, உங்கள் ஹீரோயின் ரெடியாகி வந்து, அந்த காட்சியை எடுத்த மாதிரிதான் என்று சிவாஜி கூறியுள்ளார்.
இதை கேட்ட நாயகி ஜெயலலிதா, நாங்கள் 7 மணிக்கு வந்தாலும், முதல் ஷாட் 9 மணிக்கு தான் எடுப்பீர்கள். அப்படி இருக்கும்போது எதற்காக 7 மணிக்கு நான் வர வேண்டும் என்று கேட்க, அருகில் இருந்த சிவாஜி, நாளை காலை நான் சீக்கிரம் வந்துவிடுவேன் 7 மணிக்கு முதல் ஷாட் எடுக்கலாம் என்று கூறியுள்ளார். இதை கேட்ட ஜெயலலிதா நானும் ரெடி என்று ரூ1000 பந்தையம் கட்டியுள்ளனர். இவர்களின் பந்தையம் குறித்து செட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்துவிட்டது.
மறுநாள் இவர்களில் யார் முதலில் வருகிறார்கள் என்பதை பார்க்க செட்டில் இருந்த அனைவரும் முன்பே வந்துவிட, சிவாஜி 7 மணிக்கு சரியாக செட்டுக்குள் வந்துள்ளார். ஆனால் அவருக்கு முன்பு லைட்மேன் கூட வராத நிலையில், மேக்கப்புடன் ஜெயலலிதா கால்மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்துள்ளார். அவரின் அருகில் சென்ற சிவாஜி, சரிம்மா நான் தோத்துட்டேன். இந்த என்று பந்தய பணத்தை கொடுக்க, அந்த பணத்தை வைத்து செட்டில் இருந்த அனைவருக்கும் ஐஸ்கிரீம் கேட் வாங்கி கொடுத்துள்ளார் ஜெயலலிதா. இந்த தகவலை நடிகை குட்டி பத்மினி சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“