சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி ஆதிகம் செலுத்திய ஜெயலலிதா, தண்ணீர் காட்சி என்பதால் ஷூட்டிங்கையே நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 1975-ம் ஆண்டு தமிழில் வெளியான படம் அவளுக்கு ஆயிரம் கண்கள். ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஜெயலலிதா, பி.ஆர்.வரலட்சுமி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்தை டி.ஆர்.ராமண்ணா இயக்கியிருந்தார். டி.கே.ராமமூர்த்தி இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது தண்ணீரில் நடிக்க வேண்டிய காட்சி என்பதால் நடிகை ஜெயலலிதா படப்பிடிப்பையே நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது. இந்த படத்தில் ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்த நடிகை பி.ஆர்.வரலட்சுமி டூரிங் டாக்கீஸ் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் இது குறித்து பேசியுள்ளார்.
தமிழில் 1972-ம் ஆண்டு வெளியான வாழையடி வாழையாக என்ற படத்தின் மூலம் அறிமுகமான பி.ஆர்.வரட்சுமி, தொடர்ந்து ஜெய்சங்கர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். 1977-ம் ஆண்டு வெளியான நவரத்தினம் படத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது சன்டிவியின் சுந்தரி சீரியலில் சுந்தரியின் பாடியாக நடித்து வருகிறார்.
இதனிடையே அவளுக்கு ஆயிரம் கண்கள் படம் குறித்து பேசியுள்ள, பி.ஆர்.வரலட்சுமி, இந்த படத்தின் ஷூட்டிங் பூண்டி அணையில் நடைபெற்றது. நானும் ஜெயலலிதாவும் சேர்ந்து நடனமாட வேண்டிய காட்சி. அனைத்தும் தயார் நிலையில் இருந்தது. நாங்கள் அனைவரும் காத்திருந்தபோது, ஜெயலலிதா வந்தார். வந்தவுடன் அவருக்கு காட்சிகள் விளக்கப்பட்டது.
தண்ணீரில் இறங்கியதும் நடன இயக்குனர் ஸ்டெப்ஸ் சொல்லிக்கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் ஜெயலலிதா என்ன நினைத்தாரோ தெரியவில்லை உடனடியாக காரில் ஏறி கிளம்பிவிட்டார். ஏன் அப்படி கிளம்பிவிட்டார் என்று போன் செய்து கேட்டபோது, நீங்கள் தண்ணீரில் நடிக்க வேண்டும் என்று சொல்லவே இல்லையே. நான் பாவாடை தாவனியில் இருக்கிறேன். தண்ணீரில் இறங்கினால் சரியாக இருக்காது. நீங்கள் இப்படியான காட்சி என்று சொல்லியிருந்தால் நான் 2 உடை எடுத்து வந்திருப்பேன் என்று கூறினார். இதனால் அன்று ஷூட்டிங் நின்றுவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“