தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என்று போற்றப்படும் இயக்குனர் கே.பாலச்சந்தர் தமிழில் பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர் சிவாஜியை வைத்து அதிக படங்கள் இயக்கவில்லை. சிவாஜி நடிப்பில் எதிரொலி என்ற ஒரு படத்தை மட்டும் இயக்கிய பாலச்சந்தர் எம்.ஜி.ஆர் நடிப்பில் எந்த படத்தையும் இயக்கவில்லை. அதே சமயம் பாலச்சந்தரின் கதையில் நடிக்க எம்.ஜி.ஆர் மறுப்பும் தெரிவித்துள்ளார்.
நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் கே.பாலச்சந்தர். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அதேபோல் சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடகங்களை எழுதி இயக்கி நடித்து வந்த கே.பாலச்சந்தர், கடைசி தீர்ப்பு என்ற நாடகத்தை முதன் முதலில் எழுதி இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து பல நாடகங்களை எழுதிய கே.பாலச்சந்தரின் கைவண்ணத்தில் வந்த நாடகம் தான் விநோத ஒப்பந்தம். இந்த நாடகத்தில் மேஜர் சுந்தர்ராஜன், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து அடுத்ததாக கே.பாலச்சந்தர் எழுதிய நாடகம் தான் மேஜர் சந்திரகாந்த். இந்த நாடகத்தை எழுதி இயக்கிய கே.பாலச்சந்தர் அதில் மேஜர் சந்திரகாந்த் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். தான் பணியாற்றிய அலுவலகத்தில் வெளி மாநிலத்தில் இருந்து ஒரு அதிகாரி மாற்றலாகி வருவதால், அவரை வரவேற்க இந்த நாடகத்தை ஆங்கிலத்தில் நடத்தினார் கே.பாலச்சந்தர். பின்னாளில் இந்த நாடகம் தமிழில் நடத்தப்பட்டபோது கே.பாலச்சதருக்கு பதிலாக மேஜர் சுந்தர்ராஜன் மேஜர் சந்திரகாந்த் கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த நாடகத்தை பார்க்க வந்த இயக்குனர் டி.ஆர்.ராமண்ணாவின் நண்பர் ஒருவர் இந்த நாடகத்தை எம்.ஜி.ஆருடன் வந்து பார்க்குமாறு கூறியதை தொடர்ந்து அவரும் எம்.ஜி.ஆரும் நாடகத்தை பார்க்க வந்துள்ளனர். நாடகத்தை பார்த்த எம்.ஜி.ஆர் நாடகத்தையும் அதில் மேஜராக நடித்த சுந்தர்ராஜனுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார். இதன் மூலம் நமது கதை சினிமாவில் படமாக போகிறது என்று கே.பாலச்சந்தர் மகிழ்ச்சியில் இருந்தார்.
ஆனால் நாடகத்தை பார்த்துவிட்டு வெளியில் சென்ற எம்.ஜி.ஆர் இதில் நான் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். படத்தில் நாயகி இல்லை என்பதால் தான் அவர் அப்படி சொல்கிறார் என்று நினைத்த இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா இதில் நாயகி கேரக்டரை சேர்ந்துகொள்ளலாம் என்று கூறினார். ஆனாலும் இந்த படத்தில் நான் குருடனாக நடித்தால் எனது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை நீங்கள் தான் என்னை குருடனாக ஆக்கிவிட்டீர்கள் என்று உங்களை தான் ரசிகர்கள் திட்டுவார்கள் தியேட்டர் சீட்டை கிழித்து பிரச்சனை செய்வார்கள் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட டி.ஆர்.ராமண்ணா இந்த திட்டத்தை கைவிட்ட நிலையில், 1965-ம் ஆண்டு நீர்குமிழி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கே.பாலச்சந்தர், தனது 3-வது படமாக 1966-ம் ஆண்டு மேஜர் சந்திரகாந்த் படத்தை இயக்கினார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் சுந்தர்ராஜன் மேஜர் சுந்தர்ராஜனமாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“