தமிழகத்தில் இதுவரை ஆட்சி செய்த முதல்வர்களின் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் கர்மவீரர் காமராஜர். குழந்தைகளின் கல்விக்காக தனது வாழ்நாளின் பெரும்பகுதியை ஒதுக்கிய இவர், திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் இல்லை என்றாலும், தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டதால் குழந்தைகளை மையமாக கொண்ட ஒரு திரைப்படத்தை பார்த்துள்ளார்.
Advertisment
க்ளாசிக் சினிமா தொடங்கி இன்றைய டிஜிட்டல் சினிமா வரை பல வெற்றிப்படங்களை கொடுத்த ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்து 1965-ம் ஆண்டு வெளியான படம் குழந்தையும் தெய்வமும். தி பேரண்ட் ட்ராப்ஸ் என்ற ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படததில் ஜெய்சங்கர், ஜமுனா, நாகேஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கண்ணதாசன், வாலி ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.
திருமணம் செய்துகொண்ட ஜெய்சங்கர் – ஜமுனா இருவருக்கும் இரு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், இருவருக்கும் இடையெ கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆளுக்கு ஒரு குழந்தையாக அழைத்துக்கொண்டு தனியாக சென்றுவிடுவார்கள். இதனால் தாய் அன்பு இல்லாமல் ஒரு குழந்தையும் தந்தை அன்பு இல்லாமல் ஒரு குழந்தையும் பரிதவித்து இருக்கும் நிலையில், தாய் ஜமுனாவிடம் இருக்கும் பெண் குழந்தை பாடுவது போல் ஒரு பாடல் அமைந்திருக்கும்.
‘’கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே’’ என்ற இந்த பாடலை ஒரு குழந்தை பார்க்கும் அனைத்து விஷயங்களையும் குழந்தையின் பார்வையில் இருந்து பார்த்து ஒரு குழந்தையாகவே மாறி கண்ணதாசன் இந்த பாடலை எழுதியிருப்பார். இந்த படத்தில் வந்த அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இந்த பாடல் கேட்பவர் நெஞ்சை கரையவைக்கும் அளவுக்கு தனது எழுத்துக்களில் கண்ணதாசனும், இசையில் எம்.எஸ்.வியும் தங்களது திறமையை நிரூபித்திருப்பார்கள்.
இந்த படம் குழந்தைகளுக்கான படம் என்பதால், நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று தயாரிப்பாளரான ஏ.வி.மெய்யப்ப செட்டியார் வற்புறுத்த காமராஜர் முதல்முறையாக ஒரு திரைப்படத்தை பார்த்துள்ளார். அந்த படம் தான் குழந்தையும் தெய்வமும். இந்த தகவலை தனது விளரி யூடியூப் சேனலில் ஆலங்குடி வெள்ளைச்சாமி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“