வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்களை தனது பாடல் வரிகள் மூலம் சொல்லிக்கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் தான் கவியரசர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி ரஜினிகாந்த் கமல்ஹாசன் என பலருக்கும் தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்துள்ள கண்ணதாசன் பெரும்பாலான பாடல்களை தனது வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை வைத்து எழுதியுள்ளார்.
அதே சமயம் கண்ணதாசன் எழுதிய சில பாடல்கள் பெரிய ஹிட் அடித்துள்ள நிலையில், அந்த பாடல்கள் எழுதிய தருணங்கள் என பொய்யான சில தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு கண்ணதாசனின் பிள்ளைகள் அவ்வப்போது விளக்கம் அளித்து வருகிறது. அந்த வகையில், கண்ணதாசன் எழுதிய 2 பாடல்கள் எப்போது எந்த சூழ்நிலையில் எழுதப்பட்டது என்பது குறித்து அவரின் மகள் ரேவதி சண்முகம், சோசியல் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி கவிஞராகவும், தமிழக அரசின் அரசவை கவிஞராகவும் இருந்தவர் தான் கவியரசர் கண்ணதாசன். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதேபோல் இவரின் அண்ணன் ஏ்.எல்.சீனிவாசன் பிரபல திரைப்பட தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் பல படங்களை தயாரித்துள்ளார். ஒருமுறை கண்ணதாசன் மது அருந்த பணம் இல்லை என்பதால் தனது அண்ணன் ஏ.எல்.சீனிவாசனிடம் சென்று பணம் கேட்டுள்ளார்.
அப்போது அவர் பணம் இல்லை என்று சொல்லிவிட்டதால் விரக்தியில் இருந்த கண்ணதாசன், ‘’அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே’’ என்ற பாடலை எழுதியதாக தகவல் உண்டு. ஆனால் இந்த தகவல் பொய்யானது என்று ரேவதி சண்முகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அப்பா அந்த அளவிற்கு இறங்கி வந்து மது அருந்த ஒருவரிடம் பணம் கேட்கும் அளவுக்கு இல்லை.
இந்த நேரத்தில் தீபாவளி டைம். அப்போது நாங்கள் அனைவரும் புது துணி எடுக்கவில்லையா என்று கேட்டபோது, அப்பா கண் கலங்கினார். அவரை பார்த்த அம்மா, நீங்கல்லாம் அங்க போங்க என்று எங்களை விரட்டிவிட்டார். எங்களுக்கு புது துணி எடுப்பதற்காகவே என் அப்பா ஏ.எல்.சீனிவாசனிடம் ரூ3000 பணம் கேட்டிருந்தார். அப்போது அவர் இல்லை என்று சொல்லிவி்ட்டார். அத்துடன் முடிந்துவிட்டது. அதன்பிறகு சில மாதங்கள் கழித்து பழனி படத்திற்காக பாடல் எழுத வந்தபோது, படத்தின் சூழ்நிலை அவ்வாறு அமைந்ததால், இந்த நிகழ்வை மனதில் வைத்து அப்பா அந்த பாடலை எழுதினார் என்று கூறியுள்ளார்.
அதேபோல் யாருக்கோ சாட்சி கையெழுத்து போட்டு அவர் கடனை திருப்பி செலுத்தாதால் எங்கள் வீட்டை ஜப்தி செய்ய வந்துவிட்டார்கள். அப்போது அப்பா என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார். அதன்பிறகு எப்படியே பணம் புரட்டி கடனை அடைத்துவிட்டார் அந்த சூழ்நிலையில் எழுதிய பாடல் தான் சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் என்ற பாடல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.