உணர்வுப்பூர்வமான ஒரு படம் எடுத்த ஏ.வி.எம். நிறுவனத்திற்கு அந்த படம் திருப்தி இல்லை என்பதால், கண்ணதாசன் – சந்திரபாபு கூட்டணி, ஒரு பாடலை வைத்து இந்த படத்தை பெரிய வெற்றிப்படமாக மாற்றியுள்ளது. அது என்ன படம் என்ன பாடல் என்பதை பார்ப்போம்.
சினிமாவில் பெரும் ஜாம்பவான்களாக இருந்தவர்களின் முக்கியமானவர்கள் கண்ணதாசன் – சந்திரபாபு. தனது பாடல்கள் மூலம் சினிமாவில் கவியரசராக வலம் வந்த கண்ணதாசனுக்கு இணையாக தனது காமெடியின் மூலம் உச்சம் தொட்டவர் தான் சந்திரபாபு. இவர்கள் இருவரும் இணைந்து தோல்வியை தழுவ இருந்த ஒரு படத்தை பெரிய வெற்றிப்படமாக மாற்றிய தகவல் பலரும் அறியாத ஒன்று.
தமிழ் சினிமாவில் பழம்பெரும் பட தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமானவர் ஏ.வி.எம். நிறுவனம். இப்போது இவர்கள் படம் தயாரிக்கவில்லை என்றாலும், திரைத்துறை வட்டாரத்தில் இவர்களை பற்றி பேச்சுக்கள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன. க்ளாசிக் சினிமா தொடங்கி இன்றைய டிஜிட்டல் சினிமா வரை பல படங்களை தயாரித்து பல நடிகர்களுக்கு வெற்றிப்படங்களை கொடுத்த ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த ஒரு படம் தான் சகோதரி.
1959-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை, இயக்குனர் பீம்சிங் இயக்கியிருந்தார். பாலாஜி, தேவிகா, ராஜ சுலோக்ஷனா, சந்திரபாபு, உள்ளிட்ட பல நடித்திருந்த இந்த படத்திற்கு சுதர்சன் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். இந்த படத்தில் முதலில் சந்திரபாபு நடிக்கவில்லை. படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து படத்தை பார்த்த ஏ.வி.எம்.சரவணனுக்கு படத்தில் திருப்தி இல்லை.
படத்தில் செண்டிமெண்ட் உள்ளிட்ட அனைத்தும் நன்றாக இருந்தாலும் ஏதோ ஒன்று குறைகிறது என்று சரவணன் கூறியுள்ளார். இதன்பிறகு படத்தில் நகைச்சுவை காட்சிகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்ததை தொடர்ந்து, அப்போது முன்னணி நடிகராக இருந்த சந்திரபாபு இந்த படத்தில் கமிட் ஆகி நடிக்க தொடங்கியுள்ளார். அதேபோல் அன்றைய காலக்கட்டத்தில் சந்திரபாபு பாடல் பொதுவாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்தால் இந்த படத்தில் அவருக்கு ஒரு பாடல் காட்சியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பாடலை எழுத கவியரசர் கண்ணதாசன் வரவழைக்கப்படுகிறார். படத்தில் பால்காரனாக வரும் சந்திரபாபுக்கு, கவியரசர் பாடல் எழுத, அதை தனது குரலிலேயே சந்திரபாபு பாடி முடிக்கிறார். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சந்திரபாபு பாடிய பாடலும் ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்று படத்திற்கு மேலும் வெற்றியை பெற்று கொடுத்துள்ளது. இந்த பாடல் தான் ‘’நானொரு முட்டாளுங்க’’ என்ற பாடல். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் ஒரு பாடலாக உள்ளது.
கண்ணதாசன் சென்னை தமிழை பயன்படுத்தி எழுதிய இந்த பாடல் காட்சியும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் இந்த பாடல் காட்சி மற்றும் இதில் வரும் காமெடி காட்சிகள் அனைத்து சந்திரபாபு தாமே ஷூட் செய்து படத்தில் இணைத்த காட்சிகளாகும். இந்த காட்சிகளை இயக்கியதற்காக, சந்திரபாபுவுக்கு படத்தின் பட்ஜெட்டை தாண்டி தனியாக சம்பளம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.