தமிழ் சினிமாவில் தனது பாடல்கள் மூலம் இன்றும் நிலைத்திருக்கும் கவியரசர் கண்ணதாசன், அறிஞர் அண்ணாவுக்கு உடல்நிலை சரியில்லாதபோது தன்னால் நலம் விசாரிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தை ஒரு பாடலில் வெளிப்படுத்தியிருப்பார். அந்த பாடல் இன்றும் பெரிய ஹிட் பாடல் என்பது பலருக்கும் தெரியாத ஒரு தகவல்.
சினிமாவில், கவிஞர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், என பன்முக திறமையுடன் வலம் வந்த கண்ணதாசன், மனித உணர்ச்சிகள் அனைத்திற்கும் தனது பாடல்கள் மூலம் உயிர் கொடுத்தவர். இவர் எழுதிய பாடல்கள், காலம் கடந்து இன்றும் நிலைத்திருக்கிறது. சினிமாவில், முத்திரை பதித்தது போல் அரசியலிலும் முத்திரை பதிக்க முயற்சி செய்த கண்ணதாசன், அதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
தொடக்கத்தில்ம், எம்.ஜி.ஆர், கருணாநிதி சிவாஜி கணேசன், ஆகியோருடன் திராவிட முன்னேற்ற கழகத்தில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் இயங்கி வந்த கண்ணதாசன், ஒரு கட்டத்தில் அதில் இருந்து விலகி, தனியாக கட்சி தொடங்கினார். சில மாதங்கள் இந்த கட்சியை வழி நடத்திய கண்ணதாசன், அதன்பிறகு தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துவிட்டு, முன்னாள் முதல்வர் காமராஜருடன் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைந்துக்கொண்டார்.
இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அப்போது முதல்வராக இருந்த அறிஞர் அண்ணாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இது குறித்து கேள்விப்பட்ட கண்ணதாசன், அவரிடம் நலம் விசாரிக்க முடியவில்லையே என்று சோகமாக இருந்துள்ளார். அந்த நேரத்தில் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் தனது தில்லானா மோகனாம்பாள் படத்திற்காக ஒரு பாடல் கேட்டுள்ளார்.
பாடலுக்காக சூழ்நிலையை இயக்குனர் சொன்னவுடன், அது தனது இப்போதைய நிலைக்கு ஒத்து போகிறதே என்று யோசித்த கண்ணதாசன், அந்த பாடலை சற்று நேரத்தில் எழுதி முடித்துள்ளார். அந்த பாடல் தான் ‘’சிவாஜியிடம் பத்மினி நலம் விசாரிப்பது போன்று அமைந்த நலந்தானா என்ற பாடல். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. எழுதியவரும் இல்லை. யாருக்காக எழுதினாரோ அவரும் இல்லை. ஆனால் பாடல் மட்டும் நிலைத்திருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“