தமிழ் சினிமாவில் மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது பாடல்கள் மூலம் உயிர்கொடுத்துள்ள கவியரசர் கண்ணதாசன், ஒரு காதல் பாடலில், காதல் என்ற வார்த்தையை பயன்படுத்தாமலே பாடலை எழுதியிருப்பார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
தமிழ் சினிமாவில் இசைக்கு என்றும் எம்.எஸ்.வி என்பது போல் பாடலுக்கு என்றும் கண்ணதாசன் என்பது எழுதப்பாடாத விதி. இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய பல பாடல்கள் காலம் கடந்து நிலைத்து இருக்கிறது. எம்.எஸ்.வியுடன் இணைந்து பல பாடல்களை உருவாக்கிய கண்ணதாசன், மற்ற இசையமைப்பாளர்கள் இசையிலும் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் உருவான ஒரு பாடல் தான் கடல் மீன்கள் என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல்.
1981-ம் ஆண்டு, ஜி.என்.ரங்கராஜன் இயக்கத்தில் வெளியான படம் கடல்மீன்கள். கமல்ஹாசன், சுஜாதா, நாகேஷ், அம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில், கண்ணதாசன், பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர். கமல்ஹாசன் அப்பா மகன் என இரு வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில், அப்பா கமல்ஹாசன், அம்மா சுஜாதாவுக்கு இடையில் காதல் உருவாகும்.
இவர்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பிரிந்துவிடுவார்கள். அப்பா கமல்ஹாசன் வேறு திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பார். சுஜாதா ஒரு குழந்தையை பெற்றெடுப்பார். அவரும் கமல்ஹாசன். தனது அப்பாவை பழிவாங்க நிறைய முயற்சி செய்வார். இறுதியில் கமல்ஹாசன் சுஜாதா இருவரும் ஒரே நேரத்தில் மரணமடைந்து விடுவார்கள்.
Advertisment
Advertisements
கமல்ஹாசன் - சுஜாதா இருவரும் காதலிக்கும்போது வரும் பாடல் தான் தாலாட்டுதே வானம் என்ற பாடல். காதலர்கள் மத்தியில் இன்றும் சிறப்பான வரவேற்பை பெற்று வரும் இந்த பாடல் காதல் பாடல் தான் என்றாலும் கூட, இந்த பாடல் வரிகளில் ஒருமுறை கூட காதல் என்ற வார்த்தை இல்லாமல் பாடலை முடித்திருப்பார் கவியரசர் கண்ணதாசன். அதிலும் குறிப்பாக காதலிக்கும்போது வரும் இந்த பாடலில் ''இரு கண்கள் மூடி செல்லும்போதும் ஒரே எண்ணம்'' என்று எழுதிருப்பார்.
அதே சமயம் இவர்கள் இருவருமே இறந்துவிட்ட க்ளைமேக்ஸ் காட்சியில் இந்த பாடல் சோக கீதமாக ஒளிக்கும்போது, ''இரு கண்கள் மூடி செல்லும்போதும் ஒரே மௌனம்' என்று ஒரு வார்த்தையை மட்டும் மாற்றி அசத்தியிருப்பார் கண்ணதாசன்.' ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி இணைந்து பாடிய இந்த பாடல் இன்றும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் 1981-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான நிலையில், அதே ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி கண்ணதாசன் இறந்துவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“