அறிவும் திறமையும் இருந்தும் தான் தேர்தலில் தோல்வியை சந்தித்ததால் விரக்தியில் இருந்த கவியரசர் கண்ணதாசன், அந்த சோகத்தோடு சென்னை வந்தபோது அவருக்கு ஒரு தத்துவ பாடல் எழுத வாய்ப்பு வருகிறது. அப்போது அவர் எழுதிய பாடல் இன்றுவரை பேசப்படும் ஒரு பாடலாக நிலைத்திருக்கும் நிலையில், இந்த பாடலை பாடி நடித்த சந்திரபாபு புகழின் உச்சத்தை தொட்டார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
தமிழ் சினிமாவில், கவிஞர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் கவியரசர் கண்ணதாசன். தொடக்கத்தில் பல படங்களுக்கு திரைக்கதை எழுதிய அவர், ஒரு கட்டத்தில், பாடல் எழுதுவது உள்ளிட்ட திரைத்துறையின் பல வேலைகளில் ஈடுபட்டு அதிலும் உச்சத்தை தொட்டவர். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய இயங்கங்களின் மீது ஆர்வமாக இருந்த கண்ணதாசன், அதன்பிறகு திராவிட இயக்கத்தில் இணைந்தார்.
இதனிடையே கடந்த 1962-ம் ஆண்டு, தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், இ.வி.கே. சம்பத்துடன் இணைந்து தொடங்கிய தமிழ் தேசிய கட்சியின் சார்பில், திருகோஷ்டியூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். நாடறிந்த முகமான இருந்தாலும் கண்ணதாசன் இந்த தேர்தலில் தோல்வியை சந்திக்கிறார். இவ்வளவு பிரபலமாக இருந்தும் இந்த தேர்தலில் வெற்றியை பெற முடியவில்லையே என்று விரக்தியடைந்த கண்ணதாசன் மீண்டும் சென்னை வரும்போது அவருக்கு ஏ.வி.எம்.தயாரித்த அண்னை என்ற படத்தில் பாடல் எழுத வாய்ப்பு வருகிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திய கண்ணதாசன், தான் தேர்தலில் தோல்வியை சந்தித்த விரக்தியை இந்த பாடலில் வெளிப்படுத்தும் வகையில் கூர்மையான வார்த்தைகளை பயன்படுத்தி பாடலை எழுதி முடித்திருப்பார். இந்த பாடலை பாடிய நடிகர் சந்திரபாபு, இன்றுவரை இந்த பாடல் மூலமாக அறியப்படும் நடிகராக உயர்ந்து நிற்கிறார். அந்த பாடல் தான் ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை’ என்ற பாடல். இந்த பாடலை சந்திரபாபு பாடி படத்திலும் நடித்திருப்பார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“