க்ளாசிக் சினிமாவில் தத்துவம், காதல், கோபம் என நவரசத்தையும் தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் கவிஞர் கண்ணதாசன். ஒருமனிதன் வாழ்க்கையில் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளை பற்றியும், தான் வாழ்வில் சந்தித்த இன்னல்களையும் பாடலாக கொடுத்த கண்ணதாசன் இன்றளவும் மக்கள் மத்தியில் தனது படைப்புகளின் மூலம் வாழ்ந்து வருகிறார்.
1957-ம் ஆண்டு வெளியான மகாதேவி என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக தனது திரை பயணத்தை தொடங்கிய கண்ணதாசன், அடுத்து எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், திரைக்கதை வசனம் எழுதி பல படங்களை தயாரித்தும் இருக்கிறார் கண்ணதாசன்.
அதேபோல் தனது பாடல்கள் மூலம் கவனத்தை ஈர்த்தது கண்ணதாசன் என்றால் தனது மெல்லிசையின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவர்கள் இருவரும் இணைந்தால் அந்த படம் மற்றும் பாடல்கள் அனைத்துமே வெற்றியை பெற்றுவிடும் என்பது அந்த காலத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம். இதை பலமுறை இருவருமே நிரூபித்துள்ளனர்.
அந்த வகையில் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு காட்சிக்கு தனது பாடல்கள் மூலம் 3 நிமிடங்களில் சொல்லி முடித்தவர் தான் கண்ணதாசன். 1964-ம் ஆண்டு பி.ஆர்.பந்தலு இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான படம் கர்ணன். அந்த காலத்தில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் மகாபாரத போரை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு பாடல்கள் கண்ணதாசன் எழுத, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் இயக்குனர் பி.ஆர் பந்தலுவுக்கு கண்ணன் அர்ஜூனனுக்கு கீதா உபதேசம் செய்வது போல் ஒரு காட்சி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தனது உதவியாளர்களிடம் கூறியுள்ளார். ஏற்கனவே படம் கிட்டத்தட்ட 3 மணி நேரத்தை நெருங்கியதால், இந்த காட்சி மேலும் 20 நிமிடங்கள் போகும் என்று கூறியுள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இது பற்றி எம்.எஸ்.விஸ்நாதனிடம் கூறியுள்ளனர். அவர் உடனடியாக கண்ணதாசனை வரச்சொல்லுங்கள். 3 நிமிடங்களில் முடித்தவிடுவார் என்று கூறியுள்ளார்.
அவர் சொன்னபடியே கண்ணதாசன் வரவழைக்கப்பட்டு, இயக்குனர் பி.ஆர்.பந்தலு இது குறித்து அவரிடம் பேசியுள்ளார். இதை கேட்ட கண்ணதாசன் உடனடியாக கீதை புத்தகத்தை படித்து பாடலை எழுதியுள்ளார். அப்படி எழுதிய பாடல் தான் மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா என்ற பாடல். 20 நிமிடங்கள் எடுக்க வேண்டிய காட்சியை 3 நிமிட பாடலில் முடித்த கண்ணதாசனின் திறனை பார்த்து சிவாஜி உள்ளிட்ட படக்குழுவினர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“