ஜெமினி கணேசனின் கற்பகம் படம் வெளியாகும் முன்பே அந்த படத்திற்காக கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடல், மேடையில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடப்பட்டுள்ளது. இந்த பாடலை கேட்டு கண்ணதாசன் கவிஞர் வாலியை தனது வாரிசு என்று அறிவித்தார்.
Advertisment
தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர்.இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர்.அதேபோல் ஒரு கலக்கட்டத்தில் கண்ணதாசன் எழுத வேண்டிய ஒரு பாடல் கவிஞர் வாலிக்கு வந்தது அனைவரும் அறிந்த ஒரு தகவல்.
அதே சமயம் வாலி வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் வாய்ப்பு கிடைக்காத சென்னையை விட்டு கிளம்ப முடிவு செய்தபோது, கண்ணதாசன் எழுதிய ''மயக்கமா கலக்கமா'' என்ற பாடலை கேட்டு, மனம் மாறிமீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் கற்பகம் படத்தில் பாடல்கள் எழுதி வாலி பிரபலமான நிலையில், எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல்கள் எழுத தொடங்கினார்.
கற்பகம் படத்திற்கு முன்னதாக வாலி, சில படங்களில் பாடல்கள் எழுதியிருந்தாலும், கற்பகம், அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த அத்தை மடி மெத்தையடி என்ற பாடல் உட்பட அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இன்று கொண்டாடப்படும் பாடல்களின் பட்டியலில் கற்பகம் பட பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி ஆகிய இருவரும் இசையில் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டத்தை சிவாஜி கணேசன் – கண்ணதாசன் இருவரும் இணைந்து வழங்கினர். இதற்காக நடைபெற்ற விழாவில் திரையுலக பிரபலங்கள் பலர் பங்கேற்றிருந்த நிலையில், கவிஞர் வாலி, எம்.எஸ்.விக்கு நெருக்கம் என்பதால் அவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ்.வி இசையில் கச்சேரியும் நடைபெற்றது. அப்போது கச்சேரிக்கு இடையில் எம்.எஸ்.விஸ்வநாதன், கற்பகம் என்ற வெளியாக உள்ள படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடலை பாடகி பி.சுசீலா பாடுவார் என்று சொல்லி, படம் வெளியாகும் முன்பே அவரின் இசையில் பாடல்கள் மேடை கச்சேரியில் பாடப்பட்டுள்ளது. அந்த பாடல் தான் பக்கத்துவீட்டு ‘’பருவ மச்சான் பார்வையிலே படம் பிடிச்சான்’’ என்ற பாடல்.
இந்த பாடலை கேட்ட கண்ணதாசன், பேசும்போது, கவிஞர் வாலி எழுதிய பாடலை இங்கு விஸ்வநாதன், பி.சுசீலா பாடினார்கள். அதில் ஒரு அற்புதமான வரி, மனசுக்குள் தேரோட்ட மைவிழியில் வடம்பிடித்தான். இந்த பாடலை நான் எவ்வளவு ரசித்தேன் என்று சொல்ல வேண்டுமானால் வாலி தான் என்னுடைய வாரி என்று கூறியுள்ளார். இந்த தகவலை வாலியே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“