தமிழ் சினிமாவின் முன்னணி கவிஞர்களில் முக்கயமானவராக இருந்த கவியரசர் கண்ணதாசன், தனது பாடல்கள் மட்டுமல்லாமல் மற்ற கவிஞர்களின் பாடல்களையும் ரசிக்கும் மனம் கொண்டவர் என்றாலும் தான் எழுதாத ஒரு பாடலுக்காக வருத்தப்பட்டுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்களை தனது பாடல் வரிகள் மூலம் சொல்லிக்கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் தான் கவியரசர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி ரஜினிகாந்த் கமல்ஹாசன் என பலருக்கும் தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்துள்ள கண்ணதாசன் பெரும்பாலான பாடல்களை தனது வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை வைத்து எழுதியுள்ளார்.
அதேபோல் தனது பாடல்கள் மட்டுமல்லாமல், மற்ற கவிஞர்களின் பாடல்களையும் ரசிக்கும் மனம் கொண்ட கண்ணதாசன், வாலி எழுதிய ஒரு பாடலை கேட்டுவிட்டு அவரை பாராட்டி, நான் இறந்தால் நீதான் கவி பாட வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி கண்ணதாசன் இறந்த 3-வது நாள் அவருக்கான கவிஞர் வாலி கவிதை பாடியுள்ளார். இவ்வாறு மற்ற கவிஞர்கள் பாடல்களை ரசித்த கண்ணதாசன் தான் எழுதாத பாடலுக்காக வருத்தம் அடைந்துள்ளார்.
ஒருமுறை கண்ணதாசன், தனது உதவியாளர் சக்தி வசந்தன் மற்றும் நண்பர்களுடன் வெளியூர் சென்றுள்ளார். அப்போது இரவு நேரத்தில் உளுந்தூர்பேட்டை அருகே, தான் வழக்கமாக உணவு சாப்பிடும் ஒரு ஹோட்டலுக்கு சென்று, சாப்பிட்டுள்ளார். அதன்பிறகு பணம் கொடுத்துவிட்டு வெளியே வரும்போது, இலங்கை வாணொலியில் ஒரு பாடல் ஓடிக்கொண்டிருந்துள்ளது.
படணம் கொடுத்துவிட்டு வெளியே வந்த கண்ணதாசன் அந்த பாடலை கேட்டுவிட்டு நின்றுவிட்டார். அப்போது அவரது உதவியாளர் சக்தி வசந்தன் கேட்க, இரு இந்த பாடலை கேட்டுவிட்டு போவோம் என்று கூறியுள்ளார். அதன்படி பாடல் முடிந்தவுடன், காரில் ஏறி புறப்பட்ட கண்ணதாசன் தனது உதவியாளரிடம், இப்போ ஒரு பாடல் கேட்டோமே ரொம்ப நல்லா இருந்துச்சில்ல என்று சொல்ல, ஆமாம் என்று அவர் கூறியுள்ளார்.
அதற்கு கண்ணதாசன், இந்த பாடலில் பல்லவி சரணம் சரியாக இருக்கிறது. அந்த அனு பல்லவி மட்டும் இன்னும் கொஞ்சம் சரியாக எழுதி இருக்கலாம். இந்த பாடலை எழுதிய கவிஞர் இன்னும் தம்கட்டி முயற்சி செய்திருந்தால் இந்த பாடல் இன்னும் சிறப்பான ஒரு பாடலாக அமைந்திருக்கும் என்று கூறியுள்ளர்ர். இதை கேட்ட அவரின் உதவியாளர் சக்தி வசந்தன், வேறொரு கவிஞர் எழுதிய ஒரு பாடலுக்கு ஏன் இப்படி வருத்தப்படுறீங்க என்று கேட்க, இந்த பாடல் இசையமைப்பாளின் இசைக்கு ஏற்ப வார்த்தைகளை போட்டுள்ளார்.
இசையமைப்பாளர் இந்த பாடலை ஏற்றுக்கொண்டால் போதும் என் நிர்பந்தத்தில் எழுதியது இந்த பாடல். அநேகமாக இந்த பாடலை எழுதியது ஒரு புதுமுக கவிஞராகத்தான் இருக்கும். ஆரம்பத்தில் நானும் இப்படி கஷ்டப்பட்டிருக்கிறேன். அதன்பிறகு பீம்சிங் உள்ளிட்ட இயக்குனர்கள், எம்.எஸ்.வி ராமமூர்த்தி போன்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து தான் நான் சரியாக வார்த்தைகளை கோர்க்க தொடங்கினேன் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
இதன்பிறகு சில நாட்கள் கழித்து அந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் எது அந்த பாடலை எழுதியது யார் என்பது குறித்து கண்டுபிடித்த சக்தி வசந்தன் அதை கவியரசர் கண்ணதாசனிடம் கூறியுள்ளார். அவர் சொன்னபடியே அந்த பாடலை எழுதியது ஒரு புதுமுக கவிஞர் தான். அவர் பெயர் திருச்சி தியாகராஜன். அந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் செங்கமலத் தீவு.
கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்தில் ‘’மலரை பறித்தாய் தலையில் வைத்தாய், மனதை பறித்தாய் எங்கே வைத்தாய்’’ என்ற பாடல் குறித்து தான் கண்ணதாசன் வருத்தப்பட்டுள்ளார். பி.பி.ஸ்ரீனிவாஸ் எல்.ஆர்,ஈஸ்வரி இந்த பாடலை பாடியிருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.