தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்து இன்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் முன்னிலையில் இருந்து வரும் முக்கிய கவிஞர் கண்ணதாசன். பாடல்கள் மட்டுமல்லாமல், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக திறமை கொண்ட கண்ணதாசன், மனித வாழ்க்கைக்கு தேவையான அத்தனை தத்துவங்களையும் தனது பாடல்கள் மூலம் உலகிற்கு ஒலிக்க செய்தவர்.
மேலும் மனித பிறவியின் அனைத்து உணர்ச்சிகளுக்கும் தனித்தனியாக பாடல்கள் எழுதியுள்ள கண்ணதாசன், சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். மேலும் பாடல் எழுதுவதில் சக போட்டி கவிஞர்களிடம் செல்ல சண்டையில் ஈடுபடும் கண்ணதாசன், அரசியலில் முன்னணியில் இருந்து எம்.ஜி.ஆரையே பல இடங்களில் விமர்சித்துள்ளார். ஆனாலும் எம்.ஜி.ஆர் முதல்வரானபின் அவரை அரசவை கவிஞராக நியமித்திருந்தார்.
இதனிடையே மரும மலை மாமணியே பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் இடையே ஒரு மோதல் இருந்துள்ளது. இது குறித்து கார்த்திக் கிருஷ்ணன் என்ற ஃபேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மருத மலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.
அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும். இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம். அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல்.
ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்".... குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில் முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்துவிட்டாராம்.
கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலீனை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா, என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார். கவிஞரே உங்கள் பாதம் பணிகிறோம் என்று கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“