தமிழ் சினிமாவில் மனித உணர்ச்சிகள் அனைத்திற்கும் தனது பாடல்கள் மூலம் உயிர் கொடுத்த கவியரசர் கண்ணதாசன், தனது வாழ்நாளில் அவர் எழுதிய கடைசி பாடல் குறித்து இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில், நடிகர், கதாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், பாடல் ஆசிரியர், இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட கண்ணதாசன், கவியரசர் என்று போற்றப்படுகிறார். சினிமாவில் அவருக்கு தெரியாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பெரும்பாலான துறைகளில் தனது திறமையை நிரூபித்துள்ள கண்ணதாசன், பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். அவரது பாடல்கள் காலம் கடந்து இன்றும் நிலைத்திருக்கிறது.
திருமணம், இறப்பு, என நல்ல நிகழ்வுகள், துக்க நிகழ்வுகள் என அனைத்திற்கும் கண்ணதாசன் பாடல்கள் இல்லாமல் முழுமை பெறாது என்ற நிலை இன்றும் இருக்கிறது. அந்த வகையில் பல சிறப்புகளை கொண்டுள்ள கண்ணதாசன், கடைசியாக எழுதிய பாடல், கமல்ஹாசன் நடிப்பில் பாலு மகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற ‘கண்ணே கலைமானே’ என்ற பாடல் தான்.
தமிழ் சினிமாவில், போற்றப்படும் இயங்குனர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கும் இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் கடந்த 1982-ம் ஆண்டு வெளியான படம் தான் மூன்றாம் பிறை. கமல்ஹாசன் ஸ்ரீதேவி இணைந்து நடித்த இந்த படம், காதலை அடிப்படையாக கொண்டு ஒரு உணர்வுப்பூர்வமான வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இளையராஜா இசையமைத்த இந்த படத்திற்கு, வைரமுத்து கங்கை அமரன் ஆகியோர் 3 பாடல்கள் எழுத கண்ணதாசன் 2 பாடல்கள் எழுதியிருந்தார்.
இதில் கண்ணதாசன் எழுதிய 2 பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக, அவர் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல் தான் கண்ணதாசன் எழுதிய கடைசி பாடலாக அமைந்தது. மற்ற கவிஞர்களை போல் இல்லாமல், டியூனை கேட்டவுடன், பாடலுக்கான வரிகளை சொல்லும் திறமையை வைத்திருந்த கண்ணதாசன், இந்த பாடலுக்கான டியூனை கேட்டவுடன், உடனடியாக வரிகளை சொன்னார். .இந்த மாதிரி ஒரு கவிஞர் இன்றுவரை இல்லை என்று இளையராஜா கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“