தமிழ் சினிமாவில் தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த கவியரசர் கண்ணதாசன், தனது வாழ்க்கையை ஒரு பாடலில் விவரித்ததும், அந்த பாடலை அவரே திரையில் தோன்றி பாடியதும் பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
நடிகராக ஆக வேண்டும் என்று வந்து, தனது கவித்துவத்தின் மூலம் ஒரு சிறந்த கவிஞராக மாறிய கண்ணதாசன், தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அதே போல் எம்.எஸ்.விஸ்வநாதன் – கண்ணதாசன் கூட்டணியில் வெளியான பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றும் போற்றப்படுடம் பாடல்களாக உள்ளது. 3 தலைமுறை நடிகர்களுக்கு தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்த கண்ணதாசன், நடிகராகவும் முத்திரை பதித்துள்ளார்.
சிவாஜி கணேசன், நாயகனாக அறிமுகமான பராசக்தி படம் தான் கண்ணதாசன் அறிமுகமான முதல் திரைப்படம். அதனைத் தொடர்ந்து கறுப்பு பணம் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த கண்ணதாசன், தயாரிப்பாளர், இயக்குனர், பாடல் ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமைகளுடன் திரைத்துறையில் இயங்கி வந்தார். இவருக்கு எந்த அளவிற்கு புகழ் சேர்ந்ததோ அதே அளவிற்கு சர்ச்சைகளையும் சந்தித்தவர் கண்ணதாசன்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான கண்ணதாசன், ஏராளமான கடனாளியாக இருந்தார் என்றும் தகவல்கள் உண்டு. இதில், தனக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்று கண்ணதாசனே பல மேடைகளில் பேசியுள்ளார். தனது உண்மையான கேரக்டரை வெளிப்படுத்தும் வகையில் ஒரு பாடலை எழுதி, அதை திரையில் தானே தோன்றி பாடுவது போல் தான் தயாரித்த ஒரு படத்தில் வைத்திருப்பார் கண்ணதாசன். அந்த பாடல்தான் ரத்த திலகம் படத்தில் இடம்பெற்ற ‘’ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’’ என்ற பாடல்.
இந்தியா சீனா போரை அடிப்படையாக வைத்து கதை எழுதிய அதற்கு திரைக்கதை அமைத்து கண்ணதாசன் தயாரித்த படம் தான் ரத்த திகலம். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்தில், முதல் காட்சியில் ஒரு கல்லூரி விழாவில், முன்னாள் மாணவர் முத்தையா (கண்ணதாசனின் இயற்பெயர்) பாடல் பாடுவார் என்று அறிவிக்கப்படும். அப்போது கண்ணதாசன் இந்த பாடலை மேடையில் பாடுவது போல் அமைந்திருக்கும்..எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த பாடலை டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“