தங்களுக்கு இடையே அரசியல் மோதல் இருந்தாலும் எம்.ஜி.ஆா படத்திற்கு கண்ணதாசன் எழுதிய பாடல் பெரிய ஹிட்டடித்து இன்றும் பேசப்படும் ஒரு பாடலாக உள்ளது.
சிவாஜியை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த பி.ஆர்.பந்தலுவுக்கு எம்.ஜி.ஆர் உடனடியாக கால்ஷீட் கொடுக்க அப்போது உருவான படம் தான் ஆயிரத்தில் ஒருவன். 1965-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நம்பியார். நாகேஷ் ஆகியோர் இணைந்து நடித்த இந்த படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். இந்த படம் தமிழ் சினிமாவில் அப்போது பெரிய வெற்றியை பெற்ற நிலையில், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படம் உருவான காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் – கண்ணதாசன் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இதனால் அவரை தவிர்த்து கவிஞர் வாலி அனைத்து பாடல்களையும் எழுதுவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தில் அடிமைகளை மீட்டு அழைத்து வரும்போது அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு பாடல் எழுத வேண்டும் என்று சொல்ல, வாலி உட்பட பல கவிர்கள் இந்த பாடலை எழுதுகின்றனர். ஆனால் இயக்குனர் பந்தலு – எம்.எஸ்.வி ஆகிய இருவருக்குமே அந்த பாடல்கள் பிடிக்கவில்லை
இதன் காரணமாக எம்.எஸ்.வி எம்ஜி.ஆரிடம் சென்று விஷயத்தை சொல்லி, இந்த பாடலை கண்ணதாசன் எழுதினால் நன்றாக இருக்கும் என்று சொல்ல, அவர் எழுதுவதில் எனக்கு எந்த ஆச்சேபனையும் இல்லை என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். அதன்பிறகு கண்ணதாசனை தொலைபேசியில் தொடர்புகொண்ட எம்.எஸ்.வி, படத்தின் சூழ்நிலையை சொல்ல, அவர் சரி நான் எழுதுகிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு கம்போசிங் வந்த கண்ணதாசன் உடனடியாக அந்த பாடலை எழுதி கொடுத்துள்ளார்.
அரசியலில் ஏற்பட்ட மோதல் இந்த ஒற்றை பாடலால் மீண்டும் ஒன்றினைந்தது. அந்த பாடல் தான் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற ‘’அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’’ என்ற பாடல். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை பார்த்த எம்.ஜி.ஆர், இந்த படத்தில் இன்னும் எத்தனை பாடல் இருக்கிறது என்று கேட்க, எம்.எஸ்.வி 2 பாடல்கள் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட எம்.ஜி.ஆர், அதையும் அவரையே எழுத சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அதன்பிறகு ‘’நானமோ இன்னும் நானமோ’’ மற்றும் ஓடும் மேகங்களே ஆகிய பாடல்களை ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக கண்ணதாசன் எழுதியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“