கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள், தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள் என்ற தத்துவத்தின் அடிப்படையில் கண்ணதாசன் எழுதிய சிலர் சிரிப்பார், சிலர் அழுவார் என்ற பாடல் உருவாகிய தருணம் கண்ணதாசனின் வாழ்க்கையில் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் அழிக்க முடியாத பல தத்துவ பாடல்களை கொடுத்தவர் கவியரசர் கண்ணதாசன். மனிதன் வாழ்க்கையில் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகள், சோகம், அழுகை, விரக்தி, காதல் உள்ளிட்ட பல தத்துவங்களை தனது பாடல்கள் மூலம் ஒளிக்க செய்த கண்ணதாசன், பாடல் ஆசிரியராக மட்டுமல்லாமல், திரைக்கதை ஆசிரியர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்.
அதேபோல் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் நெருக்கிய பழக்கிய கண்ணதாசன், இசையமைப்பாளர் – கவிஞர் என்பதை தாண்டி இருவருக்கும் இடையே ஒரு ஆழமான நடிப்பை போற்றி வந்தனர். அதே சமயம் கவிஞராக இருந்த கண்ணதாசன் சினிமா தயாரிப்பில் இறங்கியபோதே அவரை சுற்றி கடன் சூழ்ந்து கொண்டது. ஆனாலும் அதைப்பற்றிய கவலைகள் இல்லாமல் எப்போதும்போல் தனது வேலையில் கவனம் செலுத்தி வந்தார் கண்ணதாசன்.
அந்த வகையில் பாவமன்னிப்பு படத்தின் பாடல் ஒத்திகைக்காக கண்ணதாசன் எம்.ஸ்.விஸ்வநாதன் இருவரும் அமர்ந்திருக்கிறார்கள். பீம்சிங் இயக்கிய இந்த படத்தில், நாயகன் சந்தோஷம் துக்கம் இரண்டையும் கலந்து பாடுவது போல் இந்த பாடல் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அந்த நேரத்தில் கண்ணதாசனுக்கு ஒரு போன்கால் வந்துள்ளது. அதுவரை மகிழ்ச்சியாக இருந்த கண்ணதாசன் இதில் பேசியவுடன் சோகமானார். இதை எம்.எஸ்.விஸ்வநாதன் கவனித்துள்ளார். ஆனாலும் அது பற்றி எதுவும் கேட்கவில்லை.
பாடலை உடனடியாக எழுதி முடித்த கண்ணதாசன் அவசர அவசரமாக வீடு நோக்கி புறப்பட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த எம்.எஸ்.விஸ்வநாதன், ரெக்கார்டிங்கை முடித்துவிட்டு தனது காரில், கண்ணதாசன் வீட்டிற்கு சென்று பார்த்தபோதுதான் அவருக்கு உண்மை புரிந்தது. சினிமா எடுப்பதற்காக இந்த வீட்டை வைத்து கடன் வாங்கினேன். இப்போது வீடு ஜப்திக்கு வந்துவிட்டது என்று கண்ணதாசன் கூறியுள்ளார்.
இதை கேட்ட எம்.எஸ்.வி, ‘என்ன கவிஞரே. நாங்கள் இல்லையா உங்களுக்கு உதவமாட்டோமா என்று வருத்தத்துடன் கேட்க, கண்ணதாசன் கூட்டத்தில் இருக்கும்போது சிரிக்க வேண்டும். தனிமையில் மட்டுமே அழ வேண்டும். கூட்டத்தில் அழுதால் நடிப்பு என சொல்வார்கள்.. தனியாக சிரித்தால் பைத்தியம் என சொல்வார்கள்’ என சிரித்துக்கொண்டே தத்துவம் பேசியுள்ளார். இந்த சம்பவத்தை மனதில் வைத்து கண்ணதாசன் எழுதிய பாடல் தான், சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் என்ற பாடல்.
இந்த பாடலில், அதே போல் அந்த பாடலின் சரணத்தில் அவர் தனக்கு தானே ஆறுதல் கூறிக்கொள்வது போல், ‘காலம் ஒருநாள் மாறும்.. நம் கவலைகள் யாவும் தீரும்.. வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன்’ என எழுதியுள்ளார். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“