தமிழ் சினிமாவில் தனது எழுத்துக்கள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கவியரசர் கண்ணதாசன், தான் கதை எழுதி தயாரித்த சிவகங்கை சீமை படத்தில் வரும் ஒரு பாடலுக்காக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய ஒரு பாடலை உதாரணமாக எடுத்துக்கொண்டு பாடல் எழுதியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது பாடல்கள் மூலம் சமூக கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார். 1955-ம் ஆண்டு மகேஷ்வரி என்ற திரைப்படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமான பட்டுக்கோட்டை 1959-ம் ஆண்டு மரணமடைந்தார். தமிழ் சினிமாவில் 4 வருடங்கள் மட்டுமே வாழந்திருந்தாலும், இவரின் பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
அதேபோல் 9149-ல் வெளியான கன்னியின் காதலி என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமானவர் தான் கண்ணதாசன். அதன்பிறகு பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கண்ணதாசன், மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது பாடல்கள் மூலம் உயிர் கொடுத்துள்ளார். இந்த காலக்கட்ட ரசிகர்கள் மத்தியிலும் கண்ணதாசன் எழுதிய பல பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பாடல் ஆசிரியராக மட்டுமல்லாமல், கவிஞர். எழுத்தாளர், இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட கண்ணதாசன், எம்.ஜி.ஆர் நடிப்பில் ஊமையன் கோட்டை என்ற படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, படத்தில் இருந்து எம்.ஜி.ஆர் திடீரென விலகிகொள்கிறார். இதனால் கண்ணதாசன் மீண்டும் படத்தை தொடங்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
அதன்பிறகு, சிவகங்கை சீமை என்ற படத்தை தொடங்குகிறார். எஸ்.எஸ்.ராஜேந்திரன், வரலட்சுமி, டி.கே.பகவதி, எம்.எஸ்.ராஜம் ஆகியோர் நடித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி இணைந்து இசையமைக்க அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதியுள்ளார். 1959-ம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், பாடல்களும், பாராட்டுக்களை பெற்றிருந்தது.
இதனிடையே, இந்த படத்தில் ஆங்கிலேயே அதிகாரிகள் ஊமைத்துரையை கைது செய்து, சிறையில் அடைத்துவிட, வீட்டில் அவரது குழந்தை அழுகிறது. அந்த குழந்தைக்கு, ஆறுதல் சொல்லும் வகையில் ஒரு தாலாட்டு பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார். இந்த பாடலை எழுதும்போது, எம்.டிஸ்.வியிடம், மாடர்ன் தியேட்டர்ஸ் படத்தில் பட்டுக்கோட்டை ஒரு பாடல் எழுதினானே என்ன பாடல் அது என்று கண்ணதாசன் கேட்டுள்ளார்.
இதற்கு இசையமைத்துக்கொண்டே, அது என்ன பாடல் என்று எம்.எஸ்.வி சொல்ல, அதன்பிறகு கண்ணதாசன் எழுதிய பாடல் தான் ‘’அழுவதா கண்ணே நீயும் அழுவதா கண்ணே என்ற பாடல். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1958-ம் ஆண்டு வெளியான பெற்ற மகனை விற்ற அன்னை படத்தில், அழாதே பாப்பா அழாதே, அம்மா இருந்தா பால் தருவாங்க என்ற பாடலை உதாரணமாக கொண்டு தான் கண்ணதாசன் இந்த பாடலை எழுதியுள்ளார் என்று அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“