தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கவியரசர் கண்ணதாசன், ஆரம்பத்தில் கவிஞர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை என்று கூறியுள்ள அவருடன் ஒன்றாக தங்கியிருந்த இயக்குனர் முக்தா சீனிவாசன், கண்ணதாசன் கவிஞர் ஆனது எப்படி என்று விவரித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது பாடல்கள் மூலம் உயிர்கொடுத்தவர் கண்ணதாசன். கவியரசர் என்று அழைக்கப்படும் கண்ணதாசன், தமிழ் சினிமாவில், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து கண்ணதாசன் எழுதிய அனைத்து பாடல்களும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கண்ணதாசன் குறித்து பேசிய இயக்குனர் முக்தா சீனிவாசன், கண்ணதாசன் கவிஞர் ஆக வேண்டும் என்ற எண்ணமே இல்லாதவர். பொதுவாக ஒரு வீட்டில், படிக்கவே இல்லை என்றாலும் ஒரு சில புத்தகங்கள் இருக்கும் ஆனால் கண்ணதாசன் வீட்டில் அப்படி எந்த புத்தகமும் இருக்காது. ஆனால் அவர் எல்லாவற்றை பற்றியும் நன்றாக தெரிந்து வைத்திருந்தார். நாங்கள் அறையில் ஒன்றாக தங்கியிருக்கும்போது, எதையாவது யோசித்துக்கொண்டே இருப்பார்.
ஒருமுறை வேறொரு வேலையாக கண்ணதாசன், கோயம்புத்தூருக்கு சென்றார். அங்கு வெங்கடசாமி என்ற ஒரு மேனேஜர் இருந்தார். அவரை சந்தித்த கண்ணதாசன், எதாவது வேலை செய்வோமா சும்மா இருக்க ஒரு மாதிரி இருக்கு என்று சொல்ல, மர்மயோகி என்று ஒரு படம் எடுக்கிறார்கள். அந்த படத்தின் இயக்குனர் ராம்நாத்துக்கு 2 பாடல்கள் தேவை. நீங்கள் பாடல் எழுதுகிறீர்களா என்று கேட்க, சற்றும் யோசிக்காத கண்ணதாசன் சரி என்ற சொல்லி இயக்குனர் ராம்நாத்தை சந்தித்துள்ளார்.
அங்கு அவர், பாடலுக்கான சுச்சிவேஷனை சொல்ல, இங்கேயே உடனடியாக 2 பாடல்களை எழுதி கொடுத்துள்ளார் கண்ணதாசன். இந்த பாடல், படத்தின் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் சொல்ல, அவரும் பாடலுக்கு ஓகே சொல்ல, அன்றெ பாடல் பதிவு செய்யப்பட்டு மாலையில் ரிகர்சல் செய்யப்பட்டு இரவில் ஷூட்டிங் முடிக்கப்பட்டது. கண்ணதாசன் இப்படித்தான் கவிஞர் ஆனார் என்று முக்தா சீனிவாசன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“