தமிழ் சினிமாவில் பல பாடல்களை எழுதி இன்றும் அனைவர் மனதிலும் நிலைத்திருக்கும் கவியரசர் கண்ணதாசனின் மனிதாபிமானத்தை பார்த்து ஒரு டெய்லர் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில், கவிஞர், எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் கவியரசர் கண்ணதாசன். சினிமாவில், தனது எழுத்துக்கள் மூலம் பலரையும் வியக்க வைத்த கண்ணதாசன், அரசியலிலும் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார். திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த அண்ணா 1949-ம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கும்போது தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டவர் தான் கண்ணதாசன்.
திராவிட முன்னேற்ற கழகத்தை வழிநடத்தியதில், அண்ணாவுக்கு அடுத்தபடியாக முன்னணியில் இருந்தவர். இ.வி.கே சம்பத். பெரியாரின் அண்ணன் மகனாக இவர், ஒரு கட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரிந்து தமிழ் தேசிய கட்சியை தொடங்கியுள்ளார். அந்த கட்சியில் கண்ணதாசன் தன்னை இணைத்துக்கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காக, பல ஊர்களுக்கு சென்று பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். அப்போது அந்த கட்சியில், முக்கிய நபராக இருந்தவர் மாலி (மகாலிங்கம்) என்ற டெய்லர்.
மாலி மீது கண்ணதாசன் பெரிய மரியாதை வைத்திருந்த நிலையில், இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர். புதுக்கோட்டை அருகே ஆவுடையார் கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின்போது இருவரும் வெகுநாட்களுக்கு பிறகு சந்தித்து அன்பை பறிமாறிக்கொண்டு இருந்துள்ளனர். கூட்டம் முடிந்து அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன், என்ன மாலி பட்ஜெட் என்ன ஆச்சு என்று கண்ணதாசன், கேட்க, பட்ஜெட் பட்ஜெட் தான் என்று மாலி பதில் கூறியுள்ளார்.
இதை கேட்ட கண்ணதாசன், என்னப்பா இப்படி சொல்ற, சும்மா சொல்லு என்று கேட்க, ஒரு 6 ஆயிரம் ரூபாய் துண்டு விழும்போல என்று மாலி கூறியுள்ளார். (1960-களில் ரூ6000 என்பது பெரிய தொகை) இதை கேட்ட கண்ணதாசன் சரி விடுப்பா பார்த்துக்கொள்வோம் என்று கிளம்பியுள்ளார். மாலியும் அதை பற்றி கவலைப்படாமல், எப்படியும் சரிக்கட்டிவிடலாம் என்று நினைத்து அதைப்பற்றி மறந்து தனது டெய்லர் வேலையை பார்க்க தொடங்கியுள்ளார். சில மாதங்கள் கழித்து கண்ணதாசனிடம் இருந்து ஒரு மணியார்டர் வந்துள்ளது. இதில் ரூ6500 பணம் இருந்துள்ளனர். இதை பார்த்த மாலி வியப்பில் ஆழ்ந்துள்ளார்.
மேலும் அதில் வந்த ஒரு கடிதத்தை பிரித்து பார்த்தபோது, எப்பா மாலி இப்போது ஒரு படத்திற்கு பாடல் எழுதினேன். ரூ6500 பணம் தான் கிடைத்தது. அதை உனக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். மேலும் ஏதாவது பணம் தேவைப்பட்டால், எனக்கு கடிதம் எழுது என்று கண்ணதாசன் எழுதியுள்ளார். கண்ணதாசன் நினைத்திருந்தால், இதை அப்படியே விட்டிருக்கலாம். ஆனாலும் அவர் பணம் அனுப்பியது அவரது மனிதாபிமானத்தை காட்டுக்கிறது என்று ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது வீடியோ குறிப்பில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“