தமிழ் சினிமாவில், முன்னணி கவிஞராக திகழ்ந்த கவியரசர் கண்ணதாசன் ஒரு காதல் பாடலை கேள்வி பதில் வகையில் எழுதியதை தொடர்ந்து அந்த பாடலின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு பாடகர்கள் இருவரும் சிறப்பாக பாடி அசத்தியிருந்தனர்.
Advertisment
மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது பாடல்கள் மூலம் உயிர் கொடுத்தவர் தான் கண்ணதாசன், காதல், சோகம், மகிழ்ச்சி, வெறுப்பு, என பலவகை உணர்ச்சிகளையும் தனது வரிகள் மூலம் வெளிப்படுத்திய கண்ணதாசன், பல பாடல்களை வித்தியாசமான கோணத்தில் எழுதி ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் என்று சொல்லலாம். அந்த வகையில் அமைந்த ஒரு பாடல் தான் சாரதா படத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனர் திலகம் என்று அழைக்கப்படும் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்குனராக அறிமுகமான படம் தான் சாரதா. 1962-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில், எஸ்.எஸ்.ராஜேந்திரன் விஜயகுமாரி, எம்.ஆர்.ராதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.எல்.சீனிவாசன் தயாரித்த இந்த படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்த நிலையில், பாடல்கள் அனைத்தையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
கல்லூரியில் டீச்சராக இருக்கும் எஸ்.எஸ்.ராஜேந்திரனை அதே கல்லூரியில் படிக்கும் விஜயகுமாரி காதலிப்பார். ஆனால் அவர் மாணவி என்பதாலும், பொருளாதாரத்தில் உயர்ந்தவர் என்பதாலும், இந்த காலை எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஏற்க மறுத்துவிடுவார். ஆனாலும் விஜயகுமாரி தனக்கு காதல் தான் முக்கியம் என்று எஸ்.எஸ்.ராஜேந்திரனை சுற்றி சுற்றி வருவார். அப்போது வரும் பாடல் தான் ‘’ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்’’ என்ற பாடல்.
பொதுவாக காதல் பாடல் என்றால் மானே தேனே பொன்மானே என்ற சொற்கள் இடம்பெறும் வகையில் அமைந்திருக்கும். ஆனால் இந்த பாடலை ஒரு கேள்வி பதில் தொடராக அமைத்திருப்பார் கவியரசர் கண்ணதாசன். ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன என்று பெண் கேள்வி கேட்டு பாட, அந்த கேள்விக்கு பதில் சொல்லும் வகையில் ஆண் பாடுவார். கே.வி.மகாதேவன் சிறப்பாக இசையமைத்திருந்த இந்த பாடலை பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா ஆகியோர் பாடியிருந்தனர்.
காதல் பாடலகளிலேயே வித்தியாசமாக அமைந்திருந்த இந்த பாடலில் ஒருவன் வாழ்க்கையில் ஏற்படும் சந்தேககங்கள் அனைத்திற்கும் பதில் அளிக்கும் வகையில் அமைந்திருக்கும். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“