தமிழ் சினிமாவில் இன்று பலராலும் போற்றப்படும் முக்கிய கலைஞர்கள் பலரும் தங்களது முதல் சினிமா வாய்ப்புக்காக பல தடைகளையும் அவமானங்களையும் கடந்து வந்தவர்கள் தான். இன்னும் சொல்லப்போனால், முதல் வாய்ப்பு கிடைப்பதற்கு முன் தனக்கு இந்த வேலையே வேண்டாம் என்று உதறித்தள்ளிவிட்டு செல்ல முயன்ற சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது.
அந்த வரிசையில் முக்கிய இடத்தை பெற்றிருப்பவர் தான் கவிஞர் வாலி. க்ளாசிக் சினிமாவில் எம்.ஜி.ஆர் தொடங்கி இன்றைய நடிகரான சிம்பு வரை பலருக்கும் தனது எழுத்துக்களால் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள வாலி, இறுதிவரை வாலிப கவிஞர் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் பயணித்தவர். சினிமாவில் கண்ணதாசனுக்கு எதிராக பாடல் எழுத வேண்டும் என்று வந்தவருக்கு கடைசியில் கண்ணதாசன் பாடல் தான் அவரது மனதை மாற்றியுள்ளது.
சினிமாவில் பாடல் எழுத வேண்டும் என்ற நோக்கத்தோடு திருச்சியில் இருந்து சென்னை வந்த கவிஞர் வாலி, அன்றைக்கு முன்னணி இசையமைப்பளார்களாக இருந்த கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோரிடம் பாடல் எழுத வாய்ப்புக்கு முயற்சித்துள்ளார். ஆனால் இவரது முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும் தனது முயற்சியை தொடர்ந்துகொண்டே இருந்த வாலி ஒரு கட்டத்தில் சோர்வடைந்துவிட்டார்.
இதற்கிடையே பாடல் எழுத வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் ஒரு இயக்குனர் கண்ணதாசனிடம் உதவியாளராக சேர்த்துவிடுவதாக சொல்லியும் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார் வாலி. இவர் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலக்கடத்தில் இவருக்கு உறுதுணையாக இருந்தவர் நடிகர் கோபால கிருஷ்ணன். அவரின் நட்பு வட்டாரம் பெரியது என்றாலும் அவர் வாலிக்காக சிபாரிசு செய்தது எங்கும் எடுபடவில்லை.
இதனால் நமக்கு இனி சினிமா செட் ஆகாது என்று எண்ணிய வாலி, மதுரையில் டிவிஎஸ்.-ல் பணியாற்றும் தனது நண்பருக்கு அங்கு ஏதேனும் வேலை காலி இருக்கிறதா என்று கடிதம் எழுத, அவரோ ஒரே வாரத்தில் வேலை இருக்கிறது வந்து சேர்ந்துகொள் என்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தை பெற்ற வாலி, அடுத்த நிமிடம் மதுரைக்கு செல்வதற்காக பெட்டி படுக்கை எல்லாம் தயார் செய்து சென்னையை காலி செய்ய முடிவு செய்துள்ளார்.
அப்போது வாலியின் அறைக்கு வந்த பி.பி.ஸ்ரீனிவாஸ், இவர் வாலி சென்னைக்கு வருவதற்கு முன்பே அவரது பாடல்களை வாங்கி கொல்ம்பியா பிச்சர்ஸில் ரெக்கார்டிங் செய்திருந்தார். வாலி வறுமையின் உச்சத்தில் இருந்தபோது அவருக்கு பலமுறை உதவியும் செய்துள்ளார். அப்போது அறைக்குள் வந்த ஸ்ரீனிவாசிடம் சமீபத்தில் நீங்கள் பாடிய நல்ல பாடலை பாடுங்கள் என்று கேட்டுள்ளார் வாலி. அப்போது ஸ்ரீனிவாஸ் மயக்கமாக கலக்கமா என்ற பாடலை பாடியுள்ளார்.
இந்த பாடலை கேட்ட, வாலி தான் மதுரைக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தை அடியோடு மாற்றிக்கொண்டார். ஒரு சினிமா பாட்டு என் திசையை மாற்றி எதிர்காலத்தை நிர்ணையித்தது. நான் தொடர்ந்து போராடுவதற்கான தெம்பையும் தெளிவையும் என்னுள் தந்தது. எனக்கு உயிர்பிச்சை கொடுத்து என்னை புது மனிதனாக மாற்றியது என்று வாலி நானும் இந்த நூற்றாண்டும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
1962-ம் ஆண்டு கண்ணதாசன் தயாரித்த சுமைதாங்கி என்ற படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை கண்ணதாசன் எழுதியிருந்தார். இந்த பாடலை பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடியிருந்தார். கண்ணதாசனின் இந்த பாடல் தனக்கு கீதாஉபதேசமாக அமைந்தது என்று வாலி குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“