அரசியல் போராட்டத்தில் பங்கேற்றதால் கடுமையான வறுமைக்கு தள்ளப்பட்ட கவியரசர் கண்ணதாசன், தனது பிழைப்புக்காக தயாரிப்பாளர் ஒருவரிடம் கடன் கேட்டபோது, அவர் கடன் தர மறுத்துள்ளார். ஆனாலும் கண்ணதாசனுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில், கவிஞர், தயாரிப்பாளர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் என பன்முக திறமையுடன் வலம் வந்தவர் தான் கண்ணதாசன். தனது பாடல்கள் மூலம் மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும், வரிகளை அமைத்து சோகத்திலும், ஆறுதல் கூறிய கண்ணதாசன், அரசியலிலும் பல கட்சிகளில் பணியாற்றியுள்ளார். அதே சமயம் தனது அரசியல் போராட்டத்தின் காரணமாக வறுமையிலும் தள்ளப்பட்டு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளார்.
1953-ல் தமிழகத்தில் நடைபெற்ற கல்லக்குடி போராட்டத்தில், கலைஞர் கருணாநிதியின் தலைமையில் முதல் அணியும், ராமசுப்பையா தலைமையில் 2-வது அணியும், கண்ணதாசன் தலைமையில் 3-வது அணியும் களமிறங்கியது. இதில் பலரும் அனைவருமே கைது செய்யப்பட்ட நிலையில், கருணாநிதி, மற்றும் ராமசுப்பையா அணியை சேர்ந்தவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். ஆனால் கண்ணதாசன் மற்றும் அவருடன் இருந்த சிலர் நீண்ட நாட்கள் தங்கள் வாழ்க்கையை சிறையில் கழித்துள்ளனர்.
சிறையில் இருந்ததால் கண்ணதாசனின் எழுத்துப்பணி முடங்கிப்போனது. இதனால் அவருக்கு வருமானமும் இல்லை. சில மாதங்கள் சிறை வாழ்க்கைக்கு பின் வெளியில் வந்த கண்ணதாசன் ஒரு பக்கம் வழக்கை சந்தித்து வந்தாலும், மறுபுறம் வறுமையில் சிக்கி தவித்துள்ளார். இதன் காரணமாக தனது முன்னாள் முதலாளியான மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்தை சந்தித்து தனக்கு கொஞ்சம் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
கண்ணதாசனின் நிலையை பார்த்த டி.ஆர்.சுந்தரம், உனக்கு பணம் தர முடியாது என்று உடனடியாக பதில் சொல்லிவிட்டார். இதனால் பணம் கிடைக்கும் என்று நம்பி வந்த கண்ணதாசனுக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், சோகத்துடன் அங்கிருந்து கிளம்பியுள்ளார். அப்போது அவரை அழைத்த டி.ஆர்.சுந்தரம், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி தருகிறாயா என்று கேட்டுள்ளார். இந்த வாய்ப்பை விட மனமில்லாத கண்ணதாசன் உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அதன்பிறகு அவருக்கு ரூ500 பணம் கொடுத்த டி.ஆர்.சுந்தரம் இங்கேயே இருந்து திரைக்கதை எழுதும் பணியை செய். வழக்கை சந்திப்பதற்காக மட்டும் சென்னை போய்விட்டு வா என்று கூறியுள்ளார். அப்படி கண்ணதாசன் முதன் முதலில் கதை, திரைக்கதை வசனம் எழுதிய படம் தான் இல்லற ஜோதி. டி.ஆர்,சுந்தரம், ஜி.ஆர்.ராவ் ஆகியோர் இணைந்து இயக்கிய இந்த படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி இணைந்து நடித்திருந்தனர். 1954-ம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“