தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கவிஞர் வாலி, பிரபல இயக்குனரின் படத்தில் பாடல் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில், அவரது ஆசை கண்ணதாசன் ஊருக்கு சென்ற நேரத்தில் நடந்துள்ளது. அந்த பாடலை ஹிட் ஆக்கினாரா வாலி?
Advertisment
தமிழ் சினிமாவில், கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக தமிழ் சினிமாவில், பாடல் எழுத வந்தவர் தான் வாலி. கற்பகம் படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற வாலி, அடுத்தடுத்து பல ஹிட் பாடல்களை எழுதி பிரபலமானார். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் கண்ணதாசன் இடையே மோதல் ஏற்பட்டபோது, வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட வாலி, தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.
அதேபோல் கண்ணதாசனுக்கு எதிராக பாடல் எழுத வந்திருந்தாலும், வாலி பின்னாளில் கண்ணதாசனுடன் நெருங்கிய நட்பில் இருந்துள்ளார். முன்னணி இயக்குனர்கள் பலரின் படங்களில் வாலி பாடல்கள் எழுதியிருந்தாலும், புதுமை இயக்குனராக ஸ்ரீதர்து தனது படங்களில் கண்ணதாசனை மட்டுமே பாடல் எழுத வேண்டும் என்ற முடிவில் இருந்துள்ளார். அப்போது ஸ்ரீதரின் படங்களில் பாடல் எழுத வேண்டும் என்று விரும்பிய வாலி, அதற்காக சித்ராலயா கோபியை அணுகியுள்ளார்.
சித்ராலயா கோபு இயக்குனர் ஸ்ரீதரின் நெருங்கிய நண்பர் மட்டுமல்லாமல், அவரின் படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். வாலியின் விருப்பத்தை நேரம் வரும்போது நிறைவேற்றுவதாக கோபு உறுதி அளித்துள்ளார். அடுத்த சில மாதங்கள் கழித்து, ஸ்ரீதர் நெஞ்சிருக்கும் வரை என்ற படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியுள்ளார்.
இறுதிக்கட்டத்தில், அவசரமாக ஒரு பாடல் தேவை என்ற நிலையில், கண்ணதாசன் அப்போது வெளியூர் சென்றதால், அவரை பிடிக்க முடியவில்லை. இதனால் சித்ராலயா கோபு வாலியை வைத்து பாடல் எழுதலாம் என்று ஸ்ரீதரிடம் சொல்ல, அவரும் சரி வரச்சொல்லுங்க என்று கூறியுள்ளார். அதன்படி வாலி அங்கு வர, பாடலுக்கான சூழ்நிலையை ஸ்ரீதர் விலக்கி கூறியுள்ளார். வேலையில்லாத மூன்று இளைஞர்கள் பீச்சில் பாடிக்கொண்டு செல்வது போன்ற ஒரு பாடல் என்று சொல்ல, உடனடியாக தனது வரிகளை கொடுத்துள்ளார் கவிஞர் வாலி.
அப்படி வாலி எழுதிய ஒரு பாடல் தான், ‘’நெஞ்சிருக்கு எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழந்தே தீருவோம்’’ என்ற பாடல். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.