க்ளாசிக் சினிமாவின் முன்னணி கவிஞர்களின் முக்கியமானவர் இருவர் கண்ணதாசன் – வாலி. கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் சினிமாவில் நுழைந்து பின்னாளில் அவருக்கு போட்டியாளராக மாறியவர் தான் வாலி. இவர்கள் இருவரின் வாழ்க்கையிலும் ஒரு மாதிரியான சம்பவங்கள் நடந்துள்ளது.
சினிமா பாடல்கள் மூலம் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்ட முக்கிய கவிஞர் கண்ணதாசன். ஒரு பாடல் எழுத வேண்டும் என்றால் அது சாதாரணமாக இல்லாமல் தன் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை வைத்து பாடல் எழுதும் கண்ணதாசன், இயக்குனர் தயாரிப்பாளர், கதாசிரியர், உள்ளிட்ட பல திறமைகளை உள்ளடக்கி இருந்தார்.அதேபோல் மனித வாழ்க்கையின் அத்தனை உணர்ச்சிகளையும் பாடலாக வெளிப்படுத்தியுள்ள கண்ணதாசனின் வரிகள் ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கும்.
அதே சமயம் கண்ணதாசன் எழுதிய பாடல் சிலவற்றில் படத்தின் இயக்குனர் அல்லது இசையமைப்பாளர் சில வார்த்தைகளை சேர்த்ததால் பாடலில் உண்மையான வரிகள் மறந்து அந்த வார்த்தைகளே அந்த பாடலின் அடையாளமாக மாறியுள்ளது. அந்த வகையில், 1966-ம் ஆண்டு வெளியான ஒரு படத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 1966-ம் ஆண்டு ரவிச்சந்திரன் ஜெயலலிதா ஜோடியாக நடித்து வெளியான படம் குமரிப்பெண்.
இந்த படத்தில் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் இளைஞனை நகரத்து மாடர்ன் பெண்கள் கிண்டல் செய்து போல் அமைந்த இந்த பாடல் தான் வருஷத்தை பாரு 66, உருவத்தை பாரு 26 என்ற பாடல். கவியரசர் கண்ணதாசன் இந்த படத்திற்கான அத்தனை பாடல்களையும் எழுதியிருந்தாலும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதற்கு முக்கிய காரணம், இசையமைப்பாளர் எம்.ஸ்.விஸ்வநாதன் தான்.
இந்த பாடலை எழுதிக்கொடுத்துவிட்டு கண்ணதாசன் சென்றுவிட பாடலில் சற்று மெருகேற்றும் நோக்கத்தில் ஜின்ஜின் நாக்கடி என்ற வார்த்தையை சேர்த்துவிட பாடல் பெரிய வெற்றியை பெற்றதோடு மட்டுமல்லாமல் வருஷத்தை பாரு 66 என்ற வரிகள் மறந்து ஜின்ஜின் நாக்கடி என்ற வரிகளே பாடலின் அடையாளமாக மாறியுள்ளது. சில மாதங்கள் கழித்து கண்ணதாசன் மற்றொரு படத்திற்கு பாடல் எழுத சென்றபோது அவர்கள் ஜின்ஜின் நாக்கடி மாதிரி ஒரு பாடல் எழுதி கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். இதை கேட்டு கண்ணதாசன் குழப்பியுள்ளார். அதன்பிறகு குமரிப்பெண் பாடல் என்று சொல்ல, அந்த வரிகளை நான் எழுதவில்லை. இசைக்காக சேர்த்திருப்பார்கள் என்று கண்ணதாசன் விளக்கம் அளித்துள்ளார்.
அதேபோல் ஏ,சி.திரிலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான பத்திரிகாளி படத்தில் பிராமண குடும்பத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்து கவிஞர் வாலி எழுதிய பாடல் தான் கேட்டேலா அங்கே அதை பார்த்தேலா இங்கே என்ற பாடல். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இடையில் வரும் வாங்கோண்ணா வாங்கோண்ணா என்ற வரிகள் தான் பாடலின் அடையளாமாக மாறியுள்ளது. இதை இசையமைப்பாளர் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“