தமிழ் சினிமாவின் இன்றைக்கு ரீ-ரிலீஸ் செய்தாலும் பெரிய வசூலை கொடுக்கும் வகையிலான படங்களில் ஒன்றாக இருக்கும் கரகாட்டக்காரன் படத்தில், செந்தில் – கவுண்டமணி காமெடி பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், இந்த படத்தில் கவுண்டமணி நடிக்க வந்தது எப்படி என்பது குறித்து படத்தின் நாயகனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
1989-ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான படம் கரகாட்டக்காரன். ராமராஜன் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தின் மூலம் நடிகை கனகா தமிழ் சினிமாவில் அறிமுகமானர். மேலும் கவுண்டமணி செந்தில், கோவை சரளா, காந்திமதி, சண்முகசுந்தரம், சந்தானபாரதி, சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, இளையராஜா இசையமைத்திருந்தார்.
2 கரகாட்ட கோஷ்டிக்கு இடையே நடக்கும் சம்பவங்களை காமெடியாக சொல்லிய இந்த படத்தில், கவுண்டமணி – செந்தில் நடித்த காமெடி காட்சிகள் இன்றும் பேசப்பட்டு வருகிறது. தனித்தன்மையுடன் இருக்கும் கரகாட்டக்காரன் படத்தில், வரும் வாழைப்பழ காமெடி, அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு காமெடி காட்சியாக பேசப்பட்டு வருகிறது. காலம் கடந்து புகழ் பெற்று வரும் இந்த படத்தில் கவுண்டமணி இணைந்தது எப்படி?
காரகாட்டக்காரன் படத்தில், கவுண்டமணி நடித்திருந்த தவிள் வித்வான் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் எஸ்.எஸ்.சந்திரன். இதை பற்றி தெரிந்த நாயகன் ராமராஜன், அவர் அரசியல் பேசுவார். அவரது அரசியல் வேறு எனது அரசியல் வேறு. அதுவும் இல்லாமல் இந்த படம் அரசியல் படம் அல்ல. அதனால் இந்த படத்தில் அவர் வேண்டாம். அந்த கேரக்டருக்கு கவுண்மணியை போடலாம் என்று கூறியுள்ளார். ஆனால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இதற்கு மறுத்துள்ளனர்.
உடனே ராமராஜன் இந்த படத்தில் எஸ்.எஸ்.சந்திரன் இருந்தால் என்னை விட்டுவிடுங்கள் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று சொல்ல, அதன்பிறகு இந்த படத்தில் எஸ்.எஸ்.சந்திரன் நீக்கப்பட்டு, கவுண்டமணி உள்ளே வந்துள்ளார். கவுண்டமணி – செந்தில் – கோவை சரளா ஆகியோர் இடையோன காமெடி காட்சிகள் கரகாட்டக்காரன் படத்தின் வெற்றிக்கு பெரிய உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“