தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது எழுத்துக்கள் மூலம் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கவிஞர் வாலி, ஏ.வி.எம். நிறுவனத்திற்கு பாடல் எழுத சென்று, தனக்கு பாடல் எழுத வராது என்று அங்கிருந்து வெளியேறியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் தொடங்கி இன்றைய இளம் நடிகர்கள் பலருக்கும் தனது பாடல்கள் ஹிட் கொடுத்தவர் தான் வாலி. கண்ணதாசன் – எம்.ஜி.ஆர் பிரிவுக்கு பின், தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்பு கிடைத்த வாலி, எம்ஜி.ஆருக்காக பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இந்த பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நிலைத்திருக்கிறது.
அதேபோல், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கும் தனது பாடல்களை கொடுத்துள்ள வாலி, தான் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் ஏ.வி.எம்.நிறுவனம் ஒரு படத்திற்கு பாடல் எழுதுமாறு வாலியை அழைத்தபோது, அவர் தனக்கு பாடல் எழுத வராது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். அதன்பிறகு ஏ.வி.எம். நிறுவனர் வாலியை மீண்டும் அழைத்து வருமாறு கூறியுள்ளார்.
1967-ம் ஆண்டு ஏ.வி.எம். நிறுவனம் தெலுங்கில் தயாரித்த படம் பக்த பிரகலாதா. எஸ்.வி.ரங்காராவ், அஞ்சலி தேவி, ரோஜா ரமணி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் தெலுங்கில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட நினைத்த ஏ.வி.எம். நிறுவனம், அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அப்போது, டப்பிங் படத்திற்கு பாடல் எழுதுவதற்காக கவிஞர் வாலியை ஏ.வி.எம். நிறுவனர் மெய்யப்ப செட்டியார் அழைத்துள்ளார்.
டப்பிங் படத்திற்கு பாடல் எழுத போகிறோம் என்று தெரியாமல் அங்கு வந்த வாலி, இந்த படம் டப்பிங் என்று தெரிந்தவுடன், இந்த மாதிரி படத்திற்கு பாடல் எழுதி எனக்கு பழக்கம் இல்லை என்று சொல்ல, அங்கிருந்தவர்கள் முயற்சி செய்து பாருங்கள் என்று கூறியுள்ளனர். முதல் பாடலே தெலுங்கில் ரா ரா என்று தொடங்க, வாலி வா வா என்று எழுத இப்படி எழுத கூடாது என்று கூறியுள்ளனர். நான்தான் சொன்னேனே டப்பிங் படத்திற்கு எனக்கு பாடல் எழுத வராது. செட்டியாரிடம் சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார். மறுநாள் காலையில் ஏ.வி.எம் செட்டியாரிடம் இருந்து வாலிக்கு அழைப்பு வந்துள்ளது.
அப்போது, டப்பிங் படத்திற்கு வாலிக்கு பாடல் எழுத வரவில்லை என்றால் எப்படி எழுத வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள். அவர் நன்றாக எழுதுவார் என்று மெய்யப்ப செட்டியார் கூறியுள்ளார். அதன்பிறகு வாலிக்கு, டப்பிங் பட பாடல்களை எழுதுவது எப்படி என்று சொல்லிக்கொடுக்க, இன்று தொடங்கிய இந்த பயணம், ராம்சரன் நடித்த மகதீரா படத்தின் தமிழ் வெர்ஷன் மாவீரன் படம் வரை பல டப்பிங் படங்களுக்கு பாடல் எழுத வைத்துள்ளது. இந்த தகவலை வாலி ஒரு மேடையில், ஏ.வி.எம்.சரவணணிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“