க்ளாசிக் சினிமா தொடங்கி இன்றைய காலக்கட்டத்திலும் பாடகராக இருக்கும் கே.ஜே.ஏசுதாஸ், ஒரு பாடலை பாடியவுடன் அந்த பாடல் மிகவும் பிடித்துபோனதால் அதற்காக சம்பளம் வாங்காமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
1940-ம் ஆண்டு கொச்சியில் பிறந்த யேசுதாஸ், கடந்த 1963-ம் ஆண்டு வெளியான கொஞ்சும் குமரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். இவரை அறிமுகம் செய்து வைத்தவர் இசையமைப்பாளர் வேதா. அதன்பிறகு பல படங்களில் ஹிட் பாடல்களை பாடி முன்னணி பாடகராக வலம் வந்த யேசுதாஸ், எம்.எஸ்.வி, சங்கர் கணேஷ், கே.வி.மகாதேவன் உள்ளிட்ட பலரின் இசையில் பாடியுள்ளார்.
தற்போதைய காலக்கட்டத்தில் இளையராஜா, ஏ,ஆர்.ரஹ்மான் தொடங்கி டி.இமான் வரை பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள யேசுதாஸ் கடைசியாக, தமிழரசன் என்ற படத்தில் பொருத்தது போதும் என்ற பாடலை பாடியிருந்தார். பொதுவாக தான் பாடல் பாடினால் தனக்கான சம்பளத்தை சரியாக வாங்கிக்கொள்ளும் யேசுதாஸ் ஒரு பாடலின் மூலம் ஈர்க்கப்பட்டு அந்த பாடல் பாடியதற்கான சம்பளத்தை வாங்காமல் சென்றுள்ளார்.
1987-ம் ஆண்டு அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான படம் துளசி, முரளி, சீதா, வாகை சந்திரசேகர், மேஜர் சுந்தர்ராஜன், சார்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு சம்பத் - செல்வம் என்ற இரட்டையர்கள் இசைமைக்க, கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார். பட்டியல் இன இளைஞரான முரளி, மேஜர் சுந்தர்ராஜனின் மகள் சீதாவை காதலிப்பார். இதற்கு மேஜர் சுந்தர்ராஜன் எதிர்ப்பு தெரிவிப்பதால் இவர்கள் எப்படி சேர்கிறார்கள் என்பது தான் கதை.
Advertisment
Advertisements
இந்த படத்தில் அனைவரும் கோவிலில் தூங்கிக்கொண்டிருக்கும்போது, ஒருவன் உண்டியலை திருட முயற்சிக்க வாகை சந்திரசேகர் அவனை அடித்துவிடுவார். அப்போது அவர் சின்னதா திருடுகிற என்னை பிடித்துவிட்டு பெரிதாக திருடுபவர்களை விட்டுவிடுகிறீர்கள் என்று சொல்ல, எல்லாரும் ஒருநாள் மாட்டுவான் டா என்று சொல்லும் வாகை சந்திரசேகர் பாடும் பாடல் தான், ''ஊரையெல்லாம் காப்பாற்றும் தாண்டவத்தோனே'' என்ற பாடல்.
இந்த பாடல் சமூக சீர்த்திருத்திற்கு தேவையான வரிகளை அமைத்து கவிஞர் வைரமுத்து எழுதியிருப்பார். பாடலை பாட வந்த கே.ஜே.யேசுதாஸ், இந்த பாடல் அவ்வளவு அருமையாக இருக்கிறது. அதனால் எனக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனாலும் ஒப்புக்கொள்ளாத இசையமைப்பாளர் வலுக்கட்டாயமாக சம்பளம் கொடுத்த நிலையில், அதை வாங்கிக்கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பியுள்ளார் கே.ஜே.யேசுதாஸ்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“