படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்திருந்தாலும், தன்னை நம்பி இருந்த ஒரு கவிஞருக்கு பாடல் கொடுக்கவில்லை என்பதால், ஒரு கனவு பாட்டை வைக்க எம்.ஜி.ஆர் வற்புறுத்திய நிலையில், அந்த கவிஞர் ஒரு பெரிய ஹிட் பாடலை கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள எம்.ஜி.ஆர் நடிப்பில், 1977-ம் ஆண்டு வெளியான படம் மீனவ நண்பன். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் எம்.ஜி.ஆர் லதா, நம்பியார், நாகேஷ், பி.எஸ் வீரப்பா, ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். படத்தில் வாலி, புலமை பித்தன் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.
அதே சமயம் கவிஞர் முத்துலிங்கம் எழுதிய ஒரு பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் பாடல் கம்போசிங், பணிகள் முடிந்து, வசன காட்சிகள் படமாக்கப்பட்ட சமயத்தில் கவிஞர் முத்துலிங்கம், சத்யா ஸ்டூடியோவில், எம்.ஜி.ஆரை சந்தித்துள்ளார். அப்போது அவரை வரவேற்ற எம்.ஜி.ஆர் வா முத்துலிங்கம் பாடல் எழுதிவிட்டாயா என்று கேட்டுள்ளார்.
இல்லணே இந்த படத்தில் எனக்கு பாடல் கொடுக்கவில்லை என்று முத்துலிங்கம் சொல்ல, நான் கொடுக்க சொன்னேனே யாரும் சொல்லவில்லையா என்று எம்.ஜி.ஆர், கேட்க இல்லை என்று அவர் பதில் அளித்துள்ளார். இதனால் கோபமாக எம்.ஜி.ஆர், புரோடக்ஷன் மேனேஜரை அழைத்து கேட்க, நாங்கள் தேடும்போது இவர் ஊரில் இல்லை என்று அவர் கூறியுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர், அவர் இல்லை என்றால் என்னிடம் சொல்ல மாட்டீங்களா? என்று கேட்டுள்ளார்.
அதன்பிறகு முத்துலிங்கத்துக்கு ஒரு கனவு பாடல் கொடுக்க சொல்லு என்று எம்.ஜி.ஆர் சொல்ல, புரோடக்ஷன் மேனேஜரை படத்தில் பாடல்கள் அனைத்தும் முடிந்துவிட்டது. இப்போது வசனகாட்சி போய்கிட்டு இருக்கு தயாரிப்பாளரும், இயக்குனரும் பேசிகிட்டு இருக்காங்க என்று சொல்ல, அவர்கள் இருவரையும் கூப்பிடு என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். இயக்குனர் ஸ்ரீதரும் தயாரிப்பளரும் வந்தவுடன், முத்துலிங்கத்துக்கு கனவு பாடல் கொடு என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்.
இதை கேட்ட தயாரிப்பாளர், படத்தில் இந்த பாடலை சேர்க்க இடம் இருக்கிறதா ஸ்ரீதர் என்று கேட்க, அவரோ, இல்லை என்று பதில் அளித்துள்ளார். இதுக்கு என்ன இடமில்லை. ஹீரோ எங்காவது உட்கார்ந்துகொண்டு இருக்கும்போது கனவு காண்கிறான் அதுதானே சூழ்நிலை அவருக்கு பாட்டு கொடுங்க என்று சொல்ல, ஸ்ரீதரும் தயாரிப்பாளரும் ஒப்புக்கொண்டனர்.
அதன்பிறகு இசையமைப்பாளர் எம்.எஸ்வியிடம் சொல்ல,அவரோ நீ பாடல் எழுது அதுக்கு நான் மெட்டு போடுகிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட முத்துலிங்கம், ‘’அழகுகளே உன்னிடத்தில் அடைக்களம்’’ என்று பாடல் எழுத, என்னயா இது அடைக்களம் என்றெல்லாம் எழுதுறீங்க, அதெல்லாம் வேண்டாம் என்று ஸ்ரீதர் கூறியுள்ளார். அதன்பிறகு எம்.எஸ்.வி ஸ்ரீதர் இருவரும் மாறி மாறி எந்த வார்த்தை போட்டாலும் பிடிக்கவில்லை மாற்று என்றே கூறியுள்ளனர்.
அண்ணே இது செட் ஆகாது, நீங்க மெட்டு போடுங்க நான் பாட்டு எழுதுகிறேன் என்று சொல்ல, எம்.எஸ்.வி மெட்டு போட்டுள்ளார். இந்த மெட்டுக்கு கவிஞர் முத்துலிங்கம் எழுதிய பாடல் தான் ‘’தங்கத்தில் முகமெடுத்து’’ என்ற பாடல். இயக்குனர் ஸ்ரீதருக்கு பாடல் எழுதிவிட்டு மெட்டு அமைப்பதை விட, மெட்டு அமைத்துவிட்டு பாடல் எழுதுவது தான் பிடிக்கும் என்பதால் தான் இப்படி செய்துள்ளார். இந்த பாடல் இன்றும் ஒரு பெரிய வெற்றிப்பாடலாக இருந்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.