க்ளாசிக் சினிமாவில் முன்னணி நடிகராகவும் அரசியல் தலைவராகவும் திகழ்ந்த எம்.ஜி.ஆர், தன்னிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த ஒருவரிடம், உனக்கு நடிப்பு செட் ஆகாது உன் வேலையை சரியாக பார் என்று கூறியுள்ளார்.
நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் துணை நடிகராக 1936-ம் ஆண்டு சதிலீலாவதி படத்தில் அறிமுகமான எம்.ஜி.ஆர் 11 வருட போராட்டத்திற்கு பிறகு, 1947-ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். அந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்திருந்தாலும், எம்.ஜி.ஆர் ஒரு நட்சத்தர ஹீரோவாக மாறிய படம் என்றால் 1951-ம் ஆண்டு வெளியான மர்மயோகி படம் தான்.
அந்த படம் கொடுத்த மெகா வெற்றியை தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து புகழ் பெற்ற எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் அவதாரம் எடுத்து வெற்றிகளை குவித்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறிய எம்.ஜி.ஆரிடம் ஒரு சமயத்தில் ஒருவர் வந்து நான் உங்கள் தீவிர ரசிகன், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேண்டும் எனக்காக நீங்கள் சிபாரிசு செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட எம்.ஜி.ஆர் அவரின் தோற்றத்தை பார்த்து, தம்பி நீங்கள் படித்தவரா, படித்திருக்கிறீர்களா என்று கேட்டுள்ளார். இந்த கேள்விக்கு அந்த நபர், தான் வக்கீலுக்கு படித்துள்ளதாக கூறியுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் வக்கீலுக்கு படித்துவிட்டா நடிக்க வேண்டும் என்று வந்திருக்கிறீர்கள்? என்று கேட்க, ஆம்மாங்க எனக்கு ரொம்ப ஆசை, உங்களை மாதிரி நடிக்கனும், மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்றும், உங்கள் பாட்டு, வசனம் எல்லாமே எனக்கு அத்துபடி என்று கூறியுள்ளார்.
மேலும் நான் உங்கள் தீவிர ரசிகன் உங்களை மாதிரியே என் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று நினைப்பதாக சொல்ல, இதை கேட்ட எம்.ஜி.ஆர் இல்லை தம்பி அது தப்பு, நீங்கள் எப்போ வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் வேண்டாம் கொஞ்ச நாள் வக்கீல் தொழிலை கவனியுங்கள். அந்த தொழிலில் வெற்றியை பெற வேண்டும் என்று முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. என்னால் படிக்க முடியவில்லை.
உருப்படியான ஒரு வேலைக்கு போக தகுதியோ, திறமையோ இல்லாமல் போய்விட்டது. நாடகத்தில் நடித்ததால், நாடக தொழில் சினிமா என்று இதிலே வந்துவிட்டோம். அது மட்டும் தான் எங்களுக்கு தெரியும். இந்த தொழிலில் டாப்பில் வர வேண்டும் என்று நினைத்தேன் இப்போது வந்துவிட்டேன். அதேபோல் உங்களுக்குரிய தொழில் வக்கீல். அதில் நீங்கள் டாப்பில் வர வேண்டும். இனி உங்களை இங்கு பார்க்கவே கூடாது. எந்த ஸ்டூடியோவுக்கும் வாய்ப்பு தேடி நீங்கள் வர கூடாது.
உங்களால் நடிகன் ஆக முடியும். ஆனால் எங்களால் வக்கீல் ஆக முடியாது. அதனால் தொழிலை கவனியுங்கள். இவர் வாய்ப்பு தேடி வந்தால் வாய்ப்பு கொடுக்க கூடாது என்று நானே சொல்லிவிடுவேன். அதனால் நீங்கள் போய் உங்கள் தொழிலை கவனியுங்கள் என்று எம்.ஜி.ஆர் சொல்ல, அவரின் அறிவுரையை ஏற்றுக்கொண்ட அவர், அதன்பிறகு தனது தொழிலை பார்க்க சென்றுவிட்டார். வக்கீல் தொழிலில் சிறப்பாக செயல்பட்ட அவர், எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல்வர் ஆனபோது அவர் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். அவரது பெயர் கற்பகவிநாயகம். இந்த தகவல் தமிழ் அனங்கு என்ற யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.