தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்த ஏ.வி.எம்.தயாரிப்பில் எம்.ஸஜ.ஆர் நடித்த ஒரே படம் அன்பே வா. இந்த படத்தின் ஷுட்டிங்கின்போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்திருந்தாலும், இந்த படம் தயாரானதே ஒரு சுவாரஸ்மான சம்பவம் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நாடக நடிகராக இருந்து 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் துணை நடிகராக சினிமாவில் அறிமுகமானவர் தான் எம்.ஜி.ஆர். அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் துணை நடிகர், 2-வது நாயகன் என நடித்து வந்த எம்.ஜி.ஆர் 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு 1947-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்தில் இவருடன் நடிக்க முடியாது என்று சில நடிகைகள் மறுத்த சம்பவமும் உள்ளது.
தொடர்ந்து பல தடைகளை கடந்து தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக்கொண்ட எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், திரையுலகில் அறிமுகமான தொடக்கத்தில் சற்று சறுக்கலை சந்தித்தார். அந்த காலக்கட்டத்தில் மலைக்கள்ளன் என்ற படத்தில் நடித்து உச்சத்திற்கு வந்த எம்.ஜி.ஆர் திரையுலகில் தனக்கு ஒரு கட்டாய வெற்றி தேவை என்பதால், தான் சேர்ந்து வைத்திருந்த பணத்தை வைத்து நாடோடி மன்னன் என்ற படத்தை இயக்கி தயாரித்து நடித்தார்.
இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்தடுத்து பல வெற்றிகளை கொடுத்த எம்.ஜி.ஆர், தனது படங்கள் தொடர்பான முடிவை தானே எடுக்கும் நிலைக்கு உயர்ந்தார். ஆனால் இவரது விருப்பத்திற்கு மாறாக பல மாற்றங்கள் நிகழ்ந்து வெளியான படம் தான் அன்பே வா. முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்த ஏ.வி.எம் எம்.ஜி.ஆர் நடிப்பில் படம் தாயாரிக்க விரும்பி அன்பே வா படத்தின் கதையை கூறியுள்ளனர்.
இந்த கதையை கேட்டு பிடித்து போன எம்.ஜி.ஆர், படத்தில் நாயகியாக ஜெயலலிதாவை நடிக்க வைக்குமாறு சொல்ல, ஏ.வி.எம். சரோஜா தேவியை புக் செய்துள்ளனர். அதன்பிறகு நாயகியின் அப்பாவாக கே.ஏ.தங்கவேலு நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் சொல்ல, ஏ.வி.எம்.டி.ஆர்.ராமச்சந்திரனை நடிக்க வைத்துள்ளனர். படத்தில் வில்லன் இல்லை என்பதால், அசோகனுடன் ரத்தம் சொட்ட சொட்ட சண்டை காட்சிகள் வேண்டும் என்று எம்.ஜி.ஆர் சொல்ல, இந்த கதைக்கு அது சரியாக இருக்காது என்று இயக்குனர் ஏ.சி.திரிலோசகச்சந்தர் மறுத்துள்ளார்.
அதேபோல் தனது படங்களின் படப்பிடிப்பு ஸ்டூடியோவுக்குள் நடக்க வேண்டும் என்று அதிகம் விரும்பும் எம்.ஜி.ஆர் விருப்பத்திற்கு மாறாக அன்பே வா படத்தின் படப்பிடிப்பு, பெருமபாலும் வெளியூரில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படி எம்.ஜி.ஆர் விருப்பம் இல்லாமல், பல மாற்றங்களுடன் வெளியான இந்த படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்து பெரிய வெற்றியை பெற்றது. எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையில் அன்பே வா ஒரு முக்கியமான படம் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“