எம்.ஜி.ஆர் நடிப்பில் ஏ.வி.எம் தயாரித்த க்ளாசிக் ஹிட் திரைப்படமாக அமைந்த அன்பே வா திரைப்படத்தில், ஒரு பாடலுக்கு எம்.ஜி.ஆர் தனது சந்தேகத்தை கேட்க, எம்.எஸ்.வி அடுத்து என்ன நடக்க போகிறதோ என்று பயத்தில் நடுக்கியுள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் பழமையான தயாரிப்பு நிறுவனம் என்று அழைக்கப்படும் ஏ.வி.எம். நிறுவனம் சார்பில், 1966-ம் ஆண்டு வெளியான படம் அன்பே வா. எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ், டி.ஆர்.ராமச்சந்திரன், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வாலி எழுதியிருந்தார்.
ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் படம், கலர் படம் என்ற அறிவிப்பு வெளியான உடனே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்துள்ளது. அதேபோல் எம்.ஜி.ஆர் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி முழுக்க முழுகக் ஒரு காதல் படத்தில் நடித்தது இது தான் முதல் முறை. அதனால் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற வேண்டும் என்று ஏ.வி.எம் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த படத்தில் எம்.ஜி.ஆரை கலாய்க்க வேண்டும் என்பதற்காக, சரோஜா தேவி குருப் ஒரு பாடலை பாடுவார்கள். இந்த பாடலில் நாடோடி ஓடோடி என்ற வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும். அப்போது எம்.ஜி.ஆர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்று, ஒரு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த பாடலை பார்த்த எம்.ஜி.ஆர் அது என்ன நாடோடி ஓடோடி என்று எழுதி இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். எம்.ஜி.ஆர் இப்படி கேட்டவுடன் எம்.எஸ்.வி அடுத்து என்ன நடக்க போகிறதோ என்று நடுங்கியுள்ளார்.
அதன்பிறகு படத்தின் வசனகர்த்தா ஆரூர் தாஸ், இந்த பாடல் முதலில் இப்படி தான் இருக்கும். பிறகு நீங்கள் இதற்கு பதிலடி கொடுப்பீர்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பாடலை மாற்றிவிடலாம் என்று சொல்ல, பரவாயில்லை. இருக்கட்டும் எனக்கு சந்தேகம் வந்தது. நீங்கள் தீர்த்து வைத்தீர்கள் அவ்வளவு தான் பாடலை மாற்ற வேண்டாம். ஏ.வி.எம்.செட்டியாரிடமும் சொல்ல வேண்டாம். அப்புறம் எம்.ஜி.ஆர் மறுத்துவிட்டார் என்ற வதந்தி பரவி விடும் என்று கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் இப்படி சொன்னதை கேட்டவுடன், எம்.எஸ்.வி நிம்மதி பெருமூச்சி விட்டுள்ளார். இந்த தகவலை ஏ.வி.எம்.குமரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“