எம்.ஜி.ஆர் நடித்த ஒரு படத்தில் பாடலுக்கு டூப் போட்டுக்கொள்ளலாம் என்று எம்.ஜி.ஆர் சொல்ல, சரி என்று சொன்ன, படத்தின் இயக்குனர், அவரை சீண்டிவிட்டு அந்த பாடல் முழுவதுக்கும் நடனமாட வைத்துள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் பழமையான தயாரிப்பு நிறுவனம் என்று அழைக்கப்படும் ஏ.வி.எம். நிறுவனம் சார்பில், 1966-ம் ஆண்டு வெளியான படம் அன்பே வா. எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ், டி.ஆர்.ராமச்சந்திரன், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை ஏ.சி.திரிலோகச்சந்தர்இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வாலி எழுதியிருந்தார்.
ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் படம், கலர் படம் என்ற அறிவிப்பு வெளியான உடனே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்துள்ளது. அதேபோல் எம்.ஜி.ஆர் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி முழுக்க முழுகக் ஒரு காதல் படத்தில் நடித்தது இது தான் முதல் முறை. அதனால் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற வேண்டும் என்று ஏ.வி.எம் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த படத்தில் வரும் நாடோடி நாடோடி என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலின் முதல் பாதியில் தனது கல்லூரி நண்பர்களை வைத்துக்கொண்டு சரோஜா தேவி எம்.ஜி.ஆரை கிண்டல் செய்து பாடுவார். அதன்பிறகு பாடலின் 2-ம் பாதியில் எம்.ஜி.ஆர் தனது நடனம் மற்றும் பாடல்கள் மூலம் பதிலடி கொடுக்கும் வகையில் அந்த பாடல் அமைந்திருக்கும். இந்த பாடலில் பல வெஸ்டர்ன் டான்ஸ் இருந்ததால், பாடலுக்கு டூப் வைத்துக்கொள்ளலாம் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்.
இந்த படத்தில் உதவி நடன இயக்குனராக புலியூர் சரோஜா இருந்துள்ளார். படத்தின் இயக்குனர் ஏ.சி.திரிலோகச்சந்தர், உங்களுக்கு பதிலாக ஒரு பையனை வைத்து படமாக்கலாம். நீங்கள் பாடலுக்கு இடையில் வந்து செல்லும் காட்சிகளை எடுத்துவிடலாம் என்று கூறியுள்ளார். சரி என்று சொன்ன எம்.ஜி.ஆர், புலியூர் சரோஜா சொன்ன அனைத்து நடன அசைவுகளையும் சிறப்பாக செய்து நடித்துள்ளார். காட்சி படமாக்கப்பட்டு முடித்தவுடன், எனக்கு பதிலாக டூப் வைத்து காட்சிகள் எடுத்தீர்களே அதை போட்டு காட்டுங்க நான் பார்க்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்.
இதை கேட்ட இயக்குனர் ஏ.சி.திரிலோகசந்தர், அதை வீட்டில் வைத்துவிட்டேன் என்று மழுப்பலாக பதில் சொல்ல, எம்.ஜி.ஆர் உண்மையை சொல்லுங்க என்று கூறியுள்ளார். நீங்கள் நன்றாக டான்ஸ் ஆடுவீங்கனு தெரியும். அதனால் தான் உங்களை சீண்டிவிட்டேன். உண்மையில் உங்களுக்கு டூப் இல்லை. முழு பாடலுக்கும் நீங்கள்தான் நடனமாடியுள்ளீர்கள் என்று சொல்ல, எம்.ஜி.ஆர் அதிர்ச்சியில் ஆச்சரியமாக பார்த்துள்ளார். ஓ.எச்.சினிமா யூடியூப் சேனலில், பத்திரிக்கையாளர் சபீதா ஜோசப் இந்த தகவலை கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“