எம்.ஜி.ஆருக்காக எழுதிய கதையில், எம்.ஜி.ஆர் கால்ஷீட் கொடுக்காததால், அவரது கேரக்டரில் வேறொரு நடிகர் நடித்து அந்த படம் பெரிய ஹிட்டாகியுள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
திரைத்துறையில் எம்.ஜி.ஆர் – சின்னப்ப தேவர் இடையேயான நட்பு பலரும் அறிந்த ஒன்று. எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரிப்பதற்காகவே தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சின்னப்ப தேவர், 1956-ம் ஆண்டு தாய்க்கு பின் தாரம் என்ற படத்தை எம்.ஜி.ஆர் நடிப்பில் தயாரித்திருந்தார். சின்னப்ப தேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது.
பெரிய வெற்றிப்படமாக அமைந்த தாய்க்கு பின் தாரம் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட முடிவு செய்த சின்னப்ப தேவர், அதற்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இதில் எம்.ஜி.ஆருக்கு பதிலாக வேறொரு டப்பிங் கலைஞரை டப்பிங் பேச வைத்து படத்தை தெலுங்கில் வெளியிட்டுள்ளனர். இதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் நான் இருக்கும்போது என்னை கேட்காமல் என் குரலை டப் செய்துவிட்டார் என்று கோபப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். சில மாதங்களுக்கு பிறகு எம்.ஜி.ஆருக்கான புது கதை தயார் செய்த சின்னப்ப தேவர், கதையை எம்.ஜி.ஆரிடம் சொல்லி, கால்ஷீட் கேட்டுள்ளார். ஆனால் தாய்க்கு பின் தாரம் படத்தில் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக கால்ஷீட் கொடுக்காமல் எம்.ஜி.ஆர் இழுத்தடித்துள்ளார். இதனால் கோபமான சின்னப்ப தேவர், எம்.ஜி.ஆருக்காக எழுதிய கதையில் ரஞ்சன் என்ற நடிகரை நடிக்க வைத்துள்ளார்.
1957-ம் ஆண்டு நீலமலை திருடன் என்ற பெயரில் வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தாலும், இந்த படத்தில் வரும் பாடல்கள், சண்டை காட்சிகள் என அனைத்துமே எம்.ஜி.ஆர் செய்வது போலவே அமைந்துள்ளது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற சத்தியமு லச்சியமாய் என்ற பாடலை டி.எம்.சௌந்திராஜன் பாடியிருந்தார். இந்த பாடலுக்கு திரையில் ரஞ்சன் நடிக்கும்போது எம்.ஜி.ஆர் நடிப்பது போல ரசிகர்கள் ரசித்து பார்த்துள்ளனர்.
இதனிடையே சிறு கோபம் காரணமாக கால்ஷீட் கொடுக்காததால், வேறு நடிகரை வைத்து படம் எடுத்துவிட்டாரே என்று எம்.ஜி.ஆர், சின்னப்ப தேவர் மீது கோபப்பட சில வருடங்கள் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்ததை தொடர்ந்து 1961-ம் ஆண்டு வெளியான, தாய் சொல்லை தட்டாதே படம் மூலம் இருவரும் இணைந்தனர். அதன்பிறகு எம்.ஜி.ஆர் திரைத்துறையை விட்டு விலகும்வரை அவரது படங்களை மட்டுமே சின்னப்ப தேவர் தயாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“