தமிழ் சினிமாவில் நடிப்பால் உச்சம் தொட்ட எம்.ஜி.ஆரும், இசையால் உச்சம் தொட்ட இளையராஜாவும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இருந்துள்ளது. ஆனால் இது கடைசிவரை நடக்காமல் போன நிலையில், இந்த படத்தில் நடந்த சுவாரஸ்யமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனி முத்திரை பதித்திருந்த எம்.ஜி.ஆர், நாடக நடிகராக இருந்து, சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி, பல போராட்டங்கள் மற்றும் தடைகளை கடந்து சினிமாவில் நாயகனாக அவதிரித்தார். ஒரு கட்டத்தில் தனது படம் சார்ந்த முடிவுகள் அனைத்தும் தானே எடுக்கும் நிலைக்கு வந்த எம்.ஜி.ஆர், பலருக்கும் உதவிக்கரம் நீட்டியுள்ளார். நஷ்டத்தில் இருந்த தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுத்து உதவியுள்ளார்.
சினிமாவில் இருந்தபடியே அரசியலில் செயல்பட்டு வந்த எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில், திமுகவில் இருந்து நீக்கப்பட்டபோது, அதிமுக என்ற புதிய கட்சியை உருவாக்கி தொடர்ந்து 3 முறை முதல்வராக பதவியில் இருந்தார். அரசியலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர் நடிப்பில் இருந்து விலகிய நிலையில், ஒரு கட்டத்தில் நடிப்பு இல்லாமல் தான் இல்லை என்பதை உணர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அவரின் எம்.ஜி.ஆர் பிச்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கும் என்ற அறிவிப்பு வந்தது.
படத்திற்கு உன்னை விட மாட்டேன் என்று டைட்டில் வைக்கப்பட்ட நிலையில், அப்போது சினிமாவில் இசையமைப்பாளராக வளந்து வந்த இளையராஜாவை இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யுமாக எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். அதன்படி ஒப்பந்தம் செய்யப்பட்ட இளையராஜா, தனது கம்போசிங் வேலைகளை தொடங்கியுள்ளார். முதலில் ஒரு பாடல் பதிவு நடைபெற்றுள்ளது. இந்த பாடலை டி.எம்.எஸ்.பாடியுள்ளார். இந்த பாடலை கேட்ட எம்.ஜி.ஆர் சரியில்லை வேறொருவரை பாட வையுங்கள் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு இதே பாடலை மலேசியா வாசுதேவனை வைத்து பாட வைத்த இளையராஜா அதை எம்.ஜி.ஆருக்கு போட்டு காட்ட, இதுவும் தனக்கு சரியாக வரவில்லை என்று சொல்ல, அண்ணா இதுக்குமேல நான் என்ன செய்வது என்று இளையராஜா கேட்டுள்ளார். அதை கேட்ட எம்.ஜி.ஆர் நீயே பாடிவிடு என்று கூறியள்ளார். கம்போசிங்கின்போது இளையராஜா படியதை கேட்ட எம்.ஜி.ஆர், அவர்கள் இருவரும் உன்னை விட சரியாக பாடியிருக்கிறார்களா என்று கேட்க, இளையராஜா இல்லை என்று பதில் அளித்துள்ளார்.
அப்புறம் என்ன நீயே பாடிவிடு என்று சொல்ல, என் குரல் உங்களுக்கு சரியாக இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை அண்ணா என்று இளையராஜா சொல்ல, அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி அவரை பாட வைத்துள்ளார் எம்.ஜி.ஆர்,. ஆனால் ஒரு சில அரசியல் தடைகள் காரணமாக இந்த படம் அதன்பிறகு ட்ராப் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“