எம்.ஜி.ஆர் – கண்ணதாசன் இடையே கடுமையான மோதல் இருந்த காலக்கட்டத்திலும், அவ்வப்போது எம்.ஜி.ஆர் படங்களுக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்த நிலையில், உரிமைக்குரல் படத்தில், ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனர் என்று போற்றப்படுபவர் ஸ்ரீதர். வென்னிற ஆடை, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட பல ஃபீல் குட் திரைப்படங்களை இயக்கியுள்ள இவர், எம்.ஜி.ஆ நடிப்பில் இயக்கிய படம் உரிமைக்குரல். கடந்த 1974-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் எம்.ஜி.ஆர், லதா, நம்பியார், நாகேஷ், அஞ்சலி தேவி, வி.கே.ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
எம்.ஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைக்க, வாலி கண்ணதாசன் இருவரும் பாடல்கள் எழுதியிருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது, எம்.ஜி.ஆர் – கண்ணதாசன் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டிருந்தது. ஆனாலும், கண்ணதாசன் பாடல்களில் அலாதி பிரியம் கொண்ட ஸ்ரீதர், இந்த படத்திற்கு கண்ணதாசன் பாடல் எழுதினால் நன்றாக இருக்கும் நீங்கள் சொல்வதை வைத்து தான் முடிவு செய்ய முடியும் என்று எம்.ஜி.ஆரிடம் கூறியுள்ளார்.
இதை கேட்ட எம.ஜி.ஆர் இந்த படத்தில் கண்ணதாசன் பாடல் எழுதுவதற்கு நான் எந்த தடையும் சொல்ல மாட்டேன். அவரை வைத்து எழுத வேண்டும் என்றால் எழுதுங்கள் என்று சொல்ல, மிகுந்த உற்சாகத்தில் ஸ்ரீதர் கண்ணதாசனை சந்தித்து பாடல் எழுதுமாறு கூறியுள்ளார். அப்படி கண்ணதாசன் எழுதிய விழியே கதை எழுது, ஆம்பளைங்களா ஆகிய இரண்டு பாடல்களும் பதிவு செய்யப்பட்டு எம்.ஜி.ஆருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாடலை கேட்ட எம்.ஜி.ஆர், ரொம்பவும் அருமையாக உள்ளது என்று சொல்ல, ஸ்ரீதர் நிம்மதி பெருமூச்சி விட்டுள்ளார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் ஒரு படப்பிடிப்புக்கு லொக்கேஷன் பார்ப்பதற்காக கென்னியா சென்றிருந்த நிலையில், இங்கு எம்.ஜி.ஆர் பற்றி கண்ணதாசன் கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். மக்கள் மத்தியில் இந்த கட்டுரை தொடர்பான பேச்சு அதிகரித்த நிலையில், கண்ணதாசன் எழுதிய பாடலை வைக்கலாமா வேண்டாமா என்று ஸ்ரீதர் யோசித்துள்ளார்.
இது குறித்து எம்.ஜி.ஆரிடம் கேட்க, அவரோ இப்போவும் கண்ணதாசன் பாடல் எழுதுவதில் எனக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் எனது ரசிகர்கள் தியேட்டரில் ரகளை செய்வார்கள் என்று நீங்கள் நினைத்தால் வேறு ஒருவரை வைத்து பாடல்களை எழுதிக்கொள்ளுங்கள் என்று சொல்ல, குழப்படைந்த ஸ்ரீதர் படத்தின் விநியோகஸ்தர்களை அழைத்து இந்த பாடலை போட்டு காட்டியுள்ளார். அவர்களுக்கு பாடல் பிடித்து போக, இது கண்ணதாசன் எழுதிய பாடல் என்று சொல்கிறார்.
இதை கேட்ட விநியோகஸ்தர்கள் இப்போது நிலைமை சரியில்லை. அதனால் வேறு கவிஞரை வைத்து பாடல்கள் எழுதி படமாக்கிவிடுங்கள் என்று சொல்ல, கண்ணதாசனை சந்தித்த ஸ்ரீதர் நிலைமையை எடுத்து சொல்லி, வெறு கவிஞரை வைத்து பாடல்கள் எழுதுகிறேன் நீங்கள் தப்பா நினைக்காதீங்க என்று கூறியுள்ளார். நீங்கள் தாராளமாக எழுதிக்கொள்ளுங்கள் என்று கண்ணதாசன் சொல்ல, கவிஞர் வாலி பாடல்களை எழுதியுள்ளார்.
அதே சமயம் வெளிநாட்டில் இருந்து திரும்பிய எம்.ஜி.ஆர், ஸ்ரீதரை அழைத்து கண்ணதாசன் பாடல்கள் மிகவும் அருமையாக உள்ளது. அதை நீங்கள் விட்டுவிடாமல் அப்படியே படமாக்கினால் பெரிய ஹிட் பாடலாக அமையும் என்று கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் இப்படி சொல்வார் என்று எதிர்பார்க்காத ஸ்ரீதர் அப்படியே செய்த நிலையில், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கண்ணதாசன் பாடல்கள் பெரிய ஹிட் அடித்தது. தன்னை கடுமையாக விமர்சனம் செய்திருந்தாலும், படத்தில் கண்ணதாசன் பாடல்களை வைக்க சொன்னவர் தான் எம்.ஜி.ஆர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.