தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் உச்சத்ததை தொட்ட எம்.ஜி.ஆர், தான் எவ்வளவு உயரத்தில் இருந்திருந்தாலும், தன்னுடன் இருந்தவர்களிடம், ஒரே மாதிரியான மரியாதையை கடைபிடித்தவர் என்பது பலரும் அறிந்த ஒரு தகவல். அதற்கு உதாரணமாக தற்போது நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ஒரு சம்பவத்தை கூறியுள்ளார்.
சிறுவயதில் நாடக நடிகராக இருந்து, பின்னாளில் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமான எம்.ஜி.ஆர், ஒரு கட்டத்தில், பல தடைகளை கடந்து, நாயகனாக உயர்ந்த நிலையில், பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். சினிமாவில் தனக்கு ஒரு சறுக்கல் வருகிறது என்பதை அறிந்த எம்.ஜி.ஆர் அதன்பிறகு இயக்குனர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் என பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர்.
சினிமா மட்டுமல்லாமல், அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்த எம்.ஜி.ஆர், தி.மு.க.வில் இருந்து பிரிந்து அதிமுக கட்சியை தொடங்கி தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்தவர். அதேபோல் கஷ்டம் என்று வருபவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் வள்ளலாக இருந்த எம்.ஜி.ஆர், சினிமா மற்றும் அரசியல் என இரு துறைகளிலும் வெற்றிக்கொடியை நாட்டியவர் என்றாலும், அனைவரிடமும், அன்பாகவும் பாசமாகவும், மரியாதையாகவும் நடந்து கொண்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது ஒருமுறை ஒய்.ஜி.பார்த்தசாரதி (ஒய்ஜி.மகேந்திரன் அப்பா) எம்.ஜி.ஆருக்கு போன் செய்துள்ளார். அப்போது எம்.ஜி.ஆர் போனை எடுக்காமல் அவரது செயலாளர் எடுத்துள்ளார். இதனால் கோபமான அவர், ஒய்.ஜி.பி.னு ஒருத்தன் போன் பண்ணானு எம்.ஜி.ஆர் வந்ததும் சொல்லு, ஞாபகம் இருந்தால் போன் பண்ணட்டும் என்று கூறிவிட்டு போனை வைத்துள்ளார். இது பற்றி ஒய்ஜி.மகேந்திரன் கேட்டபோது, எவ்வளவு நேரம் பொறுமையாக இருக்கிறது என்று கேட்டுள்ளார்.
அதன்பிறகு இரவு 12 மணிக்கு எம்.ஜி.ஆர் போன் செய்துள்ளார். ஒய்ஜி.மகேந்திரன் போனை எடுக்க, போனை அப்பாவிடம் கொடு என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். போனை வாங்கிய ஒய்.ஜி.பி.யிடம், என்ன சொன்னீங்க, ஞாபகம் இருந்தால் போன் பண்ணணுமா? இப்போ ஞாகபம் இல்லாமலா 12 மணிக்கு போன் பண்றேன்? ஒன்று தெரிஞ்சிக்க வேண்டாமா ஒய்.ஜி.பி? நான் இருக்கிற பொசிசன் என்ன? எந்நேரமும் நான் போன் பக்கத்திலே இருக்க முடியுமா?
ஆனா நீங்க கேட்டீங்க ஞாபகம் இருந்தால் போன் பண்ண சொல்லுங்கனு... ஆனால் அப்படி மறக்கிறவன் இல்லை எம்.ஜி.ஆர் என்பதால் இப்போ போன் செய்தேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட ஒய்.ஜி.பி. கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த தகவலை ஒய்.ஜி.பி. மகனும், சினிமா நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன் டூரிங் டாக்கீஸ் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“