தமிழ் சினிமாவில் பழம்பெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏ.வி.எம். நிறுவனம். தனது தயாரிப்பில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இந்நிறுவனத்திற்கு பெரிய வெற்றியை பரிசளித்தர் தான் கே.பாக்யராஜ். ஏ.வி.எம்.நிறுவனத்திற்காக இவர் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து வசூலில் சாதனை படைத்திருந்தது.
இதன் காரணமாக முந்தானை முடிச்சு படத்திற்காக வெற்றி விழாவை கொண்டாட முடிவு செய்த ஏ.வி.எம் நிறுவனம், இதை எம்.ஜி.ஆர் தலைமையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்துள்ளனர். அதன்படி ஏ.வி.எம்.சரவணன் எம்.ஜி.ஆரை சந்தித்து விஷயத்தை சொல்ல, அவரும் விழாவுக்கு வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். அதே சமயம் எந்த நாளில் விழா நடத்துவது என்று கேட்க எம்.ஜி.ஆரும் ஒரு தேதியை குறித்து கொடுத்துள்ளார்.
எம்.ஜி.ஆர் சொன்ன தேதி அடுத்த வாரத்திலேயே வந்ததால், ஏ.வி.எம்.நிறுனம் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் எஸ்.பி.முத்துராமன். அதன்பிறகு ரஜனிகாந்த் கமல்ஹாசன் நடிப்பில் ஏ.வி.எம்.நிறுவனத்திற்காக பல வெற்றிப்படங்களை இயக்கிய இவர், ஏ.வி.எம்.சார்பில் எந்த நிகழ்ச்சி நடத்தாலும் இறுதியில் நன்றியுரையாற்றுவார்.
ஆனால் எம்.ஜி.ஆர் தேதி கொடுத்த நாளில், அவர் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருந்ததால், விழாவுக்கு வர முடியாத நிலை இருந்தது. எஸ்.பி.முத்துராமன் இல்லாமல் விழாவை நடத்த விரும்பாத ஏ.வி.எம்.நிறுவனத்தின் சரவணன் எம்.ஜி.ஆரை சந்தித்து விஷயத்தை சொல்லி இன்னும் ஒரு மாதம் தேதியை தள்ளி வைக்குமாறு கேட்டுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் எல்லோரும் எனக்காகத்தான் காத்திருப்பார்கள். ஆனால் நான் எஸ்.பி.முத்துராமனுக்காக காத்திருக்கனுமா என்று கேட்டுள்ளார்.
ஆனாலும் ஏ.வி.எம் நிறுவனத்தின் கோரிக்கையை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர் ஒரு மாதம் காத்திருந்து தேதி கொடுத்த பின் முந்தானை முடிச்சு படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. ஏ.வி.எம்.நிறுவனத்திற்கும் எஸ்.பி.முத்துராமனுக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்ததன் காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“