இன்றைய காலக்கடத்தில் சினிமா என்பது கலையை நோக்கி இல்லாமல் வியாபாரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஒரு படத்தின் கதை எப்படி இருக்கிறது என்பதை தாண்டி படம் எத்தனை கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது பாடல் காட்சிக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள் என்பதை தான் இப்போது அதிகம் பார்க்கிறார்கள். அதேபோல் படத்தின் தலைப்பும் கதைக்கு நெருக்கமாக இருப்பது இல்லை.
இதில் குறிப்பாக தமிழ் சினிமாவில் கதைக்கும் தலைப்புக்கும் பஞ்சம் என்று கூட சொல்லலாம். ஒரு சில படங்களை இயக்கிய இயக்குனர் ஒருவர் முன்னணி நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்கினால் அந்த கதை என்னுடையது என்று ஒரு உதவி இயக்குனர் புகார் கூறுகிறார். அதேபோல் ஒரு படத்திற்கு தலைப்பு வைக்க வேண்டும் என்றால் அதை வேறொரு இயக்குனர் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கிறார்.
கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் இதுபோன்ற பல சர்ச்கைகள் வெடித்துள்ளன. இது ஒரு பக்கம் இருக்க படத்தின் கதைக்கும், வைக்கும் தலைப்புக்கும் ஒரு நூலளவு வித்தியாசம் கூட இருப்பதில்லை. இதற்கு முக்கிய உதாரனமாக சமீபத்தில் வெளியான இறைவன் படத்தை பற்றி சொல்லலாம். சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கும் இறைவன் தலைப்புக்கும் என்ன தொடர்பு என்று இயக்குனர் சொன்னால் தான் வெளிச்சம்.
ஆனால் க்ளாசிக் சினிமாவில் இந்த நிலை அப்படியே எதிர்ப்பதமாக இருந்தது. இன்றைய கால சினிமாவில் ஒரு படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டு பாதியில் தான் தலைப்பு வைக்கிறார்கள். ஆனால் க்ளாகிச் சினிமாவில் ஒரு படத்தின் அறிவிப்பு வெளியாகும்போதே தலைப்புடன் தான் வெளியாகும். அந்த தலைப்பும் கதைக்கு மிகவும் நெருக்கமாகத்தான் இருக்கும். இந்த வகையில் வெளியான பாசமலர், உலகம் சுற்றும் வாலிபன், தெய்வமகன்,? அடிமைப்பெண் உள்ளிட்ட பல படங்களை சொல்லலாம்.
இந்த படத்தின் தலைப்புகளை நினைத்தாலே படத்தின் கதை எப்படி இருக்கும் என்பது நினைவுக்கு வந்துவிடும். இதில் தனது படத்திற்கு தலைப்பு வைத்ததற்காக ஒருவருக்கு எம்.ஜி.ஆர் பரிசு கொடுத்து பாராட்டிய சம்பவம் கூட நடந்துள்ளது. சிவாஜி நடிப்பில், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், முரடன் முத்து உள்ளிட்ட பல படங்களை இயக்கி புகழ் பெற்றவர் இயக்குனர் பந்தலு. சிவாஜி இயக்குனர் என்று சொல்லும் அளவுக்கு அவரை வைத்து படம் இயக்கிய இவர், முரடன் முத்து படத்தை இயக்கும்போது சிவாஜியுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்து அவருடன் இணையவில்லை.
முரடன் முத்து படத்தினால் கடனாளியாக மாறிய பி.ஆர்.பந்தலு எம்.ஜி.ஆரிடம் சென்று கால்ஷீட் கேட்க, அவரோ ஒரு நல்ல கதையுடன் வாருங்கள் என்று கூறியுள்ளார். அடுத்து பந்தலு சில நாட்களில் ஒரு நல்ல கதையை ரெடி பண்ணி எம்.ஜி.ஆரிடம் சொல்ல அந்த கதை எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்து போகிறது. அந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் எம்.ஜி.ஆருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.
இந்த படத்திற்கு கதை வசனம் எழுதிய ஆர்.கே.சண்முகம் இந்த கதைக்கு ஆயிரத்தில் ஒருவன் என்று பெயரிட்டுள்ளார். இந்த தலைப்பை கேட்ட எம்.ஜி.ஆர் சந்தோஷத்தில் ஆர்.கே.சண்முகத்தை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், ஆயிரத்தில் ஒருவன் என்று பெயர் வைத்து உங்களுக்கு ஆயிரத்தி ஒரு ரூபாய் பரிசு என்று கொடுத்துள்ளார். பரிசை பெற்றுக்கொண்ட ஆர்.கே.சண்முகம் இப்படி தெரிந்திருந்தால் லட்சத்தில் ஒருவன் என்று பெயர் வைத்திருப்பேன் என்று சொல்ல எம்.ஜி.ஆர் புன்னகை பூத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.