இந்திய சினிமாவில் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், எடிட்டர் என பன்முக திறமை கொண்ட நடிகை என்று பெயரேடுத்த பானுமதி, தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். 1939-ம் ஆண்டு வெளியான வரா விக்ரயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான பானுமதி அதே ஆண்டு வெளியான சந்தன தேவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து ராஜமுக்தி, அபூர்வசகோதரர்கள், லைலா மஜ்னு, நல்லதம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பானுமதி, எம்.ஜி.ஆருடன் அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன், ராஜா தேசிங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 1954-ல் வெளியான சக்ரபாணி, 1975-ல் சிவக்குமார் பானுமதி நடிப்பில் வெளியான இப்படியும் ஒரு பெண் ஆகிய இரு படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாடகியாகவும் பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
பல திறமைகளை உள்ளடக்கியிருநதாலும் பானுமதி தனக்கு பிடிக்கவில்லை என்றால், படத்தின் பாதியிலே படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறிவிடுவார். அதே போல் சக நடிகர்கள் யாரும் பானுமதியிடம் பேசவே பயப்படுவார்கள். அந்த அளவிற்கு வெளிப்படையாக பேசும் பழக்கம் உள்ள பானுமதி மீது மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு பெரிய மரியாதை இருந்தது. தான் முதல்வர் ஆன பின்னரும் எம்.ஜி.ஆர் அந்த மரியாதையை அப்படியே வைத்திருந்தார்.
எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரும் அவரை வைத்து அதிக படங்களை தயாரித்தவருமான சின்னப்ப தேவர், தான் முதன் முதலில் படம் தயாரிக்க முடிவு எடுத்தபோது பானுமதியை நாயகியாக ஒப்பந்தம் செய்ய, முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் நேரடியாக பானுமதியிடம் சொல்லாமல், எம்.ஜி.ஆரிடம் சென்று, பானுமதி டேட் வாங்கி கொடுங்கள் என்று கூறியுள்ளார். இதற்கு முன்பு பானுமதி எம்.ஜி.ஆர் இணைந்து நடித்த அனைத்து படங்களும் பெரிய வெற்றி படங்களாக இருந்தது.
அதன் காரணமாக எம்.ஜி.ஆர் – பானுமதி இணைந்து நடித்தால் சரியாக இருக்கும் என்று யோசித்துள்ளார் சின்னப்ப தேவர். இவரின் பேச்சை கேட்ட எம்.ஜி.ஆர், பானுமதியிடம் கால்ஷீட் கேட்காமல், அவரது கணவரிடம் போன் செய்து, சின்னப்ப தேவர் முதன் முதலில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். அதில் அம்மா நடிக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறார். அதற்கு நீங்கள் தான் சம்மதம் வாங்கி தர வேண்டும் என்று கூறியுள்ளார். அதை கேட்ட பானுமதி கணவரும், பானுமதியிடம் சொல்ல, அவரும் ஒப்புக்கொண்டார்.
அந்த வகையில் உருவான ஒரு படம் தான் தாய்க்கு பின் தாரம். எம்.ஜி.ஆர் பானுமதி இணைந்து நடித்த இந்த படம் தான் சின்னப்ப தேவர் தயாரித்த முதல் படமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“