தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி பாதை வகுத்து வெற்றி கண்ட எம்.ஜி.ஆர் தனது இளம் வயதில் பல வறுமையான சூழ்நிலையை கண்டுள்ளார். அப்படி இருந்தும் படிக்க முயற்சி செய்த அவரை படிக்க விடாமல் நாடகத்தில் சேர்த்தவர் தான் அவரது அண்ணன் சக்ரபாணி.
தமிழ் சினிமாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சிறுவயது முதல் ஒரு நாடக நடிகராக இருந்து 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல தடைகளை சந்தித்த அவர், சிறுசிறு வேடங்களில் நடித்து 2-வது நாயகனாக உயர்ந்தார். இதில் ஒரு சில படங்களில் வில்லன் கேரக்டரிலும் எம்.ஜி.ஆர் நடித்துள்ளார்.
அதன்பிறகு ஹீரோவாக அறிமுகமான எம்.ஜி.ஆர் வெற்றிகளை குவித்தார்.
ஒரு கட்டத்தில் தனது திரை வாழ்க்கை இறங்கு முகத்தில் சென்றபோது தானே தயாரிப்பாளர் இயக்குனராக மாறி நாடோடி மன்னன் என்ற படத்தை எடுத்து பெரிய வெற்றியை கண்டு தனது திரை வாழ்க்கையை நிலைநிறுத்திக்கொண்டவர் தான் எம்.ஜி.ஆர். சினிமாவில் தனது படங்கள் தொடர்பான முடிவுகளை தானே எடுக்கும் வல்லமையுடன் வலம் வந்த எம்.ஜி.ஆர், சிறுவயதில் தந்தையை இழந்து தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.
குடும்ப வறுமை காரணமாக எம்.ஜி.ஆர் அவரது அண்ணன் சக்ரபாணி ஆகிய இருவரும் நாடகங்களில் நடிக்கட்டும் என்று உறவினர் ஒருவர் சொன்னாலும், அதற்கு ஒப்புக்கொள்ளாத எம்.ஜி.ஆர் அம்மா சத்யபாமா, மகன்கள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்துள்ளார். வறுமை காரணமாக சாப்பாடு இல்லாததால், கடலை கடையில் வாங்கிய பட்டாணி பழைய சோற்று தண்ணீர் ஆகியவற்றை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளனர்.
அப்போது ஒருநாள் நீங்கள் பள்ளிக்கு சென்று வாருங்கள் நான் மாலை எப்படியாவது சாப்பாடு தயார் செய்து வைக்கிறேன் என்று தாய் சத்யபாமா சொல்ல, எம்.ஜி.ஆர் சக்ரபாணி இருவரும் பள்ளிக்கு சென்றுள்ளனர். பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, எனக்கு காலையில் சாப்பிட்ட பட்டாணி பழைய சோற்று தண்ணீர் போதவில்லை. ரொம்ப பசிக்குது அம்மா சாப்பாடு செய்திருப்பார் நான் போய் சாப்பிட போகிறேன் என்று எம்.ஜி.ஆர் சக்ரபாணியிடம் சொல்ல, அவரோ அம்மாவால் இனி நமக்கு சாப்பாடு போட முடியாது என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட 7 வயதான எம்.ஜி.ஆர் ஏன் என்று கேட்க, நமது அப்பா இல்லை, அம்மாவிடம் பணமும் இல்லை அவர் எப்படி நமக்கு சாப்பாடு போடுவார். இனி நாம் தான் உழைத்து சாப்பிட வேண்டும். அதனால் நம் உறவினர் சொன்னது போல், நாடகங்களில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பிறகு இந்த முடிவு குறித்து தாய் சத்யபாமாவுக்கு தெரியவர, அவரும் ஒப்புக்கொண்டு மகன்களை நாடகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் தான் எம்.ஜி.ஆர் தனது படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.