தமிழ் சினிமாவில் வாரி வழங்கும் வள்ளல் என்று பெயரேடுத்த எம்.ஜி.ஆர் தனது வாழ்நாளின் தொடக்கத்தில் இருந்து பலருக்கும் உதவி செய்வதில் முன்னணி இருந்துள்ளார். அந்த வகையில் தனது சம்பளத்தில் பாதியை பிறருக்காக கொடுத்து உதவிய எம்.ஜி.ஆர் குறித்து இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.
நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமானவர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து 10 வருடங்கள் பல போராட்டங்களுக்கு பிறகு நாயகனாக மாறியவர். அதன்பிறகு பல தடைகளை சந்தித்த அவர், தனது வெற்றிப்படங்களின் மூலம் நிலையான ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஒரு கட்டத்தில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய எம்.ஜி.ஆர், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக மாறியிருந்தார்.
இதனிடையே எம்.ஜி.ஆர் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் அவரது அண்ணன், சக்ரபாணி, ஒரு படத்தில் வில்லனாக நடிக்க எம்.ஜி.ஆரை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது அந்த படத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு ரூ50 சம்பளமாக பேசப்பட்டுள்ளது. இதற்காக முன்பணமாக ரூ25 கொடுத்துள்ளனர். இந்த பணத்தை வாங்கிக்கொண்டு எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும் வீடு திரும்பியுள்ளனர்.
இரவில் தனது அம்மாவிடம் பேசிய சக்ரபாணி, தம்பி ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறான். முன்பணம் கொடுத்தார்கள். உங்களிடம் எவ்வளவு கொடுத்தான் என்று கேட்க, ரூ10 தான் கொடுத்தான் என்று கூறியுள்ளார். இல்லையே அவர்கள் ரூ25 கொடுத்தார்களே, தம்பி வந்தவுடன் ரூ15 என்ன ஆச்சுனு கேளுங்க என்று சொல்ல, அப்போது எம்.ஜி.ஆர் வந்துள்ளார். அவரிடம் அவரது அம்மா பணம் குறித்து கேட்டுள்ளார்.
வரும் வழியில் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில், ஒரு குடும்பம் அப்பா 2 வயது வந்த மகள்கள், ஒரு பையன் என பஞ்சம் பிழைக்க வந்த குடும்பம். அவர்கள் கஷ்டத்தை பார்த்து ரூ15 அவர்களுக்கு கொடுத்தேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் அம்மா, சக்ரபாணியை அழைத்து எந்த பஸ் ஸ்டாண்டில் நாம் ஆதரவு இல்லாமல் நின்றோமோ அதே பஸ் ஸ்டாண்டில், ஒரு குடும்பத்தை காப்பாற்றி இருக்கிறான் உன் தம்பி என்று கூறியுள்ளார். இந்த தகவலை ஆர்.சுந்தராஜன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“