எம்.ஜி.ஆர் அரசியலில் முதன் முதலில் தனி கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு பிரபல நடிகையின் கணவர் பண உதவி செய்துள்ளார். அந்த நடிகை யார்? அவரது கணவர் ஏன் எம்.ஜி.ஆருக்கு உதவ வேண்டும்?
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தவர் எம்.ஜி.ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில் தணை நடிகராக அறிமுகமாகி பின்னாளில் பெரிய ஹீரோவாக வளர்ந்த அவர், ஆரம்பத்தில் தி.மு.க.வில் இருந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்தார். முதல்வர் அண்ணா இறந்த பிறகு, கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக எம்.ஜி.ஆர் தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தனியாக கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர், திண்டுக்கல் இடைத்தேர்தலில் போட்டியிட தனது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தியுள்ளார். அந்த சமயத்தல் தேவர் பிலிம்ஸ் சின்னப்ப தேவரை சந்தித்த எம்.ஜி.ஆர், நான் ஒரு கதை தருகிறேன். அதை 10 நாட்களில் படமாக்கி வெளியிட வேண்டும். அது உங்களால் தான் முடியும் என்று சொல்ல, தேவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதன்பிறகு எம்.ஜி.ஆர் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
அப்போது சின்னப்ப தேவரின் அலுவலகத்திற்கு போன் செய்த ஒருவர், நீங்கள் வியாபாரி, எம்.ஜி.ஆருக்கான இப்போது செயல்பட்டால், உங்கள் வியாபாரம் பாதிக்கும். நீங்கள் அரசியலில் ஈடுபடாமல் உங்கள் வியாபாரத்தை கவனிப்பது நல்லது என்று கூறியுள்ளார். இவர் சொல்து சரிதான் என்று யோசித்த சின்னப்ப தேவர், உடனடியாக எம்.ஜி.ஆரை சந்தித்து சொல்ல, அவரும் சொல்வது சரிதான். இதை நான் யோசிக்கவே இல்லை. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் இப்படி சொன்னாலும் மனசு கேட்காத சின்னப்ப தேவர் பெட்டி நிறைய பணத்தை எடுத்துக்கொண்டு போய், எம்.ஆர் அலுவலகத்தில் வைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் வந்துள்ளார். அதன்பிறகு தேர்தல் செலவுக்காக எம்.ஜி.ஆர் போய் நின்ற இடம் வேலாயதம் நாயர் வீடு. இவர் பிரபல நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர். சிட்பண்ட் நடத்தி வந்த அவர், பெரும் கோடீஸ்வரராக இருந்துள்ளார். எம்.ஜி.ஆர் உதவி கேட்டவுடன் உடனடியாக ஒரு பெட்டி நிறைய பணம் கொடுத்துள்ளார்.
அதன்பிறகு தேர்தல் பணிகளை கவனித்த எம்.ஜி.ஆர் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார், பின்னாளில் சிட் பண்ட் நஷ்டமாகி வேலாயுதம் நாயர் கஷ்டத்தில் இருந்தபோது, எம்.ஜி.ஆர் அவரிடம் வாங்கிய தொகையை இரு மடங்காக திருப்பி கொடுத்துள்ளார். இந்த தகவலை தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் என பன்முக திறமை கொண்ட கலைஞானம் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“