தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி பாணியை வகுத்து தனது ஆளுமையை செலுத்தி இருந்தாலும், முதல் படத்தில் நாயகனாக நடிக்கும்போது பயத்துடன் நடித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு உண்மை.
சிறுவயது முதல் நாடகங்களில் நடித்து நடிப்பை கற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர் 1936-ம் ஆண்டு வெளியான சதி லீலாவதி என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் துணை நடிகராகவும், 2-வது ஹீரோவாகவும் நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு சுமார் 10 வருடங்களுக்கு பிறகு 1947-ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி படம் தான் ஹீரோ வாய்ப்பை பெற்று கொடுத்தது.
ஆனால் அதற்கு முன்பே எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாக நடித்துள்ளார். சாயா என்று பெயரிடப்பட்ட இந்த படத்தில் தான் எம்.ஜி.ஆர் முதலில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் இந்த படத்தில் இருந்து தான் எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம் என்ற பயத்திலேயே எம்.ஜி.ஆர் நடித்து வந்துள்ளார். அவர் பயத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அப்போது முன்னணி நடிகராக இருந்த பி.யூ. சின்னப்பா ஒருநாள் படப்பிடிப்பு தளத்திற்க வந்துள்ளார்.
இதை கவனித்த எம்.ஜி.ஆரின் நண்பர்கள், இந்த படத்தில் உன்னை நீக்கிவிட்டு பி.யூ சின்னப்பாவை நாயகனாக நடிக்க வைக்க போகிறார்கள் என்று சொல்ல, எம்.ஜி.ஆர் மிகுந்த வருத்தத்தில் இருந்துள்ளார். ஆனாலும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததை ஏற்றுக்கொள்ளத பி.யூ.சின்னப்பா எம்.ஜி.ஆர் வளர்ச்சிக்கு தான் தடையாக இருக்க விரும்பவில்லை என்று கூறி அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். ஆனாலும் அந்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றுவிட்டது.
இதனால் மனவருத்தத்தில் இருந்த எம்.ஜி.ஆருக்கு புத்துயிர் தந்தவர் தான் ஏ.எஸ்.ஏ.சாமி. அவர் தான் இயக்க இருந்த ராஜகுமாரி படத்திற்காக எம்.கே. தியாகராஜ பாகவதரையும், பானுமதியையும் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் கமிட் செய்து வைத்திருந்தபோதும், ஏ.எஸ்.ஏ.சாமி. எனக்கு எம்.ஜி.ராமச்சந்திரன் மட்டுமு் கொடுங்க நான் வெற்றியை கொடுக்கிறேன் என்று உறுதியாக சொல்லி அவரை பெற்றுள்ளார்.
அவரது அந்த உறுதியின் காரணமாக எம்.ஜி.ஆருக்கு மீண்டும் நாயகன் வாய்ப்பு கிடைத்த நிலையில், படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்து எம்.ஜி.ஆருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று தந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“