தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனர் என்று பெயரேடுத்தவர் ஸ்ரீதர். 1959-ம் ஆண்டு வெளியான கல்யாண பரிசு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இவர், தொடர்ந்து, மீண்ட சொர்க்கம், விடிவெள்ளி உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருந்தார். இதில் 1963-ல் நெஞ்சம் மறப்பதில்லை, 1964-ல் காதலிக்க நேரமில்லை என்ற பெரிய வெற்றிப்படங்களை கொடுத்த ஸ்ரீதர் 1965-ம் ஆண்டு வென்னிற ஆடை என்ற படத்தை இயக்கினார்.
1962-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான டேவிட் அன்ட் லிசா என்ற படத்தின் தழுவலாக தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் நிர்மலா, மூர்த்தி உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்த நிலையில், ஜெயலலிதா இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே எம்.ஜி.ஆர் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்கி தயாரித்துக்கொண்டிருந்தார் பி.ஆர். பந்தலு.
மேலும் இந்த படத்திற்காக ஜெயலலிதாவை நாயகியாக ஒப்பந்தம் செய்ததால், எம்.ஜி.ஆர் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஜெயலலிதா அந்த படத்தின் படப்பிடிப்பு இல்லாத நாளில் ஸ்ரீதரின் வென்னிற ஆடை படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. ஆனாலும் நாயகியை மாற்றாமல் ஜெயலலிதாதான் நடிக்க வேண்டும் என்று ஸ்ரீதர் காத்திருந்து இந்த படத்தை எடுத்துள்ளார்.
அதேபோல் ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆருடன் நடித்ததால் இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்க தாமதம் ஆனாலும் இந்த படத்தின் படப்பிடிப்பில் தன்னால் இயன்றவரை ஒத்துழைப்பு கொடுத்து நடித்திருந்தார். படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து தமிழ் புத்தாண்டு தினத்தில் ஸ்ரீதரின் வென்னிற ஆடை திரைப்படம் வெளியானது படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால் முதல் நாளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.
ஆனால் முதல் காட்சி முடிந்தவுடன் தியேட்டரில் சீட்கள் கிழிக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தியேட்டர் உரிமையாளரிடம் புகார் அளித்தனர். சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து ஸ்ரீதருக்கு போன் செய்து ரசிகர்கள் தியேட்டர் சீட்களை கிழித்துவிட்டதாக புகார் அளித்துள்ளது. எதனால் ரசிகர்கள் இப்படி செய்கிறார்கள் என்று யோசித்த ஸ்ரீதர் குறிப்பிட்ட சில தியேட்டர்களில் கலாட்டா செய்து சீட்டை கிழிக்கும் ரசிகர்கள் யார் என்று பார்த்துள்ளார்.
அப்படி ஒரு தியேட்டரில் கலாட்டா செய்த சிலரை அழைத்து விசாரித்தபோது அவர்கள் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என்பது தெரியவந்துள்ளது. சீட்களை கிழிக்க காரணம் என்ன என்று கேட்டால், எம்.ஜி.ஆர் நடிப்பில் அன்று சிந்திய ரத்தம் என்ற படத்தை ஆரம்பித்துவிட்டு அதை முடிக்காமல் காதலிக்க நேரமில்லை வென்னிற ஆடை படங்களை எடுத்துக்கொண்டு இருக்கிறார் என்று கூறியுள்ளனர். இதை கேட்ட ஸ்ரீதர் ஒவ்வொரு ரசிகராக சென்று இதற்கு விளக்கம் அளிக்க முடியாது என்று நினைத்து நேராக எம்.ஜி.ஆரிடம் சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் எனது ரசிகர்கள் அப்படி செய்ய மாட்டார்களே என்று சொல்லிவிட்டு அவர்கள் அப்படி செய்திருந்தால் இனி அப்படி எதுவும் நடக்காது நான் பார்த்துக்கொள்கிறேன் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். அதன்பிறகு தியேட்டரில் கலாட்டாக்கள் சீட் கிழிப்பது நடக்கவில்லை. இந்த படத்தில் நடித்த மூர்த்தி தற்போது வென்னிற ஆடை மூர்த்தியாகவும், நிர்மலா வென்னிற ஆடை நிர்மலா என்றும் அழைக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“