எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கண்ணதாசன் எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல் எழுத முடியாத சூழலில் அவரின் உதவியாளருக்கு எம்.ஜி.ஆர் அழைப்பு விடுத்துள்ளார். அவர் வந்தாரா பாடல் எழுதினாரா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது பாடல்கள் மூலம் மருத்துவம் தேடி கொடுத்தவர் என்றால் அவர் கவியரசர் கண்ணதாசன் தான். எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினிகாந்த் கமல்ஹாசன் வரை பல நடிகர்களுக்கு தனது எழுத்துக்களின் மூலம் ஹிட் பாடல்களை கொடுத்த கண்ணதாசன், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர் என பன்முக திறமையுடன் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்.
அதேபோல் எம்.ஜி.ஆர் சிவாஜியுடன் நெருக்கமாக இருந்தாலும் அவ்வப்போது முரண்பாடு ஏற்பட்டு பிரிந்து செல்வது கண்ணதாசனின் வழக்கம். அந்த மாதிரியான ஒரு நிலைமையில் தான் எம்.ஜி.ஆர் படங்களுக்கு வாலி பாடல் எழுத தொடங்கினார். அந்த வகையில், எம்.ஜி.ஆர் – கண்ணதாசன் இடையே மோதல் இருந்த காலக்கட்டத்தில் தனது படத்திற்கு பாடல் எழுதுவதற்காக எம்.ஜி.ஆர் கண்ணதாசனின் உதவியாளரை அழைத்துள்ளார்.
1965-ம் ஆண்டு, கே.ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் கலங்கரை விளக்கம். எம்.ஜி.ஆர் சரோஜா தேவி இணைந்து நடித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, 2 பாடல்களை கவிஞர் வாலி எழுதி முடித்துள்ளார். மீதமுள்ள பாடல்களை கண்ணதாசன் எழுத வேண்டிய நிலையில், அவர் கோபமாக இருந்ததால், அடுத்து யாரை வைத்து எழுதலாம் என்று எம்.ஜி.ஆரிடம் கேட்க, எம்.ஜி.ஆர் கண்ணதாசனின் உதவியாளர் பஞ்சு அருணாச்சலத்தை கூப்பிடுங்கள் என்ற கூறியுள்ளார்.
அதன்பிறகு பஞ்சு அருணாச்சலத்திற்கு போன் செய்ய, அவர் கவிஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் பிரச்சனை நாம் எப்படி போய் பாட்டு எழுதுவது என்று யோசத்து அந்த வாய்ப்பை தட்டி கழித்துள்ளார். ஒரு கட்டத்தில் கண்ணதாசன் வீட்டுக்கு வந்த எம்.எஸ்.வி, பாருங்க அண்ணே எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுத வாய்ப்பு வந்தும் இந்த பையன் அங்க வரவே மாட்டேன்கிறான் என்று கூறியுள்ளார். அப்போது பஞ்சு அருணாச்சலம் பக்கத்தில் அமையாக இருந்துள்ளார்.
எம்.எஸ்.வி பேச்சை கேட்க, கண்ணதாசன், பஞ்சு அருணாச்சலத்தை தனியாக அழைத்து, ஏன்டா எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் தான் பிரச்சனை, உனக்கு என்ன? எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதுவது எவ்வளவு பெரிய வாய்ப்பு தெரியுமா? எனக்கு எவ்வளவு பெரிய பேர் கிடைக்கும் தெரியுமா? ஒழுங்கா போய் பாட்டு எழுதிட்டு வா என்று கூறியள்ளார். அதன்பிறகு பஞ்சு அருணாச்சலம் கலங்கரை விளக்கம் படத்தில் பாடல் எழுதியுள்ளார்.
இந்த படத்தில், என்னை மறந்ததேன், பொன்னொழில் பூத்தது ஆகிய 2 பாடல்களை பஞ்சு அருணாச்சலம் எழுதியிருந்தார். இந்த இரு பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பஞ்சு அருணாச்சலம் கண்ணதாசனின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“