எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ஒரு படத்திற்கு டப்பிங் குரல் வைத்துக்கொள்ளலாம் என்று படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் சொன்னபோது, எம்.ஜி.ஆர் அதனை ஏற்க மறுத்துவிட்ட நிலையில், அந்த படத்திற்கு வித்தியாசமாக டப்பிங் பேசியிருப்பார் எம்.ஜி.ஆர்.
தமிழ் சினிமாவில், அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் எம்.ஜி.ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில், துணை நடிகராக அறிமுகமாகி, பல தடைகளை கடந்து நாயகனாக மாறிய இவர், ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தார். யார் தயாரிப்பாரளாக இருந்தாலும், இந்த படம் தொடர்பான முடிவை தானே எடுக்கும் வல்லமையுடன் வலம் வந்தவர் எம்.ஜி.ஆர்.
அந்த வகையில், 1967-ம் ஆண்டு வெளியான காவல்காரன் படத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. எம்.ஜி.ஆர் நடிப்பில் அதிக படங்களை இயக்கிய இயக்குனர் என்ற பெருமை இயக்குனர் பா.நீலகண்டனுக்கு உண்டு. இவரது இயக்கத்தில் 1967-ம் ஆண்டு வெளியான படம் தான் காவல்காரன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிவக்குமார், நம்பியார் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தை சத்யா மூவிஸ் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார்.
இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டுவிட்டார், இதனால் படப்பிடிப்பு பாதியில் நின்றுபோன நிலையில், ஒரு சில மாதங்கள் கழித்து உடல்நலம் தேறி வந்த எம்.ஜி.ஆர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அவர் மீண்டும் வந்தபோது எடுத்த பாடல் தான் ''நினைத்தேன் வந்தாய் நூறு வயது' என்ற பாடல். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
படப்பிடிப்பு பணிகள் முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகளுக்காக, டப்பிங் பேசியபோது, எம்.ஜி.ஆர் முன்பு இருந்ததை போல் அவரால் டப்பிங் பேச முடியவில்லை. அவரின் குரல் மாறியிருந்தது. இதனால் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன், அண்ணே, உங்கள் குரல் முன்புபோல் இல்லை. இதனால் வேறு ஒருவரை வைத்து டப்பிங் பேசிவிடலாம் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு மறுத்த எம்.ஜி.ஆர், என்னை சுட்டது எல்லோருக்கும் தெரியும். குண்டு இன்னும் தொண்டையில் இருப்பதும் தெரியும்.
என் ரசிகர்கள் மக்கள் என அனைவருக்குமே எனது இந்த நிலை பற்றி தெரியும். அதனால் நானே பேசுகிறேன் நான் தவறாக பேசினாலும் அதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறி அந்த படம் முழுவதும் டப்பிங் எம்.ஜி.ஆர் பேசியுள்ளார். படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இந்த படத்திற்கு பிறகு எம்.ஜி.ஆர் நடித்த அனைத்து படத்திற்கும் அவரே டப்பிங் பேசியிருந்தார். படமும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“