தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த எம்.ஜி.ஆரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டு அவரின் கடைசி படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை லதா. 1973-ம் ஆண்டு உலகம் சுற்றும் வாலிபன் என்ற படத்தின் மூலம் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக திரையுலகில் அறிமுகமான நடிகை லதா தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் – லதா கூட்டணியில் வெளியான உரிமை குரல், நாளை நமதே, சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன், உழைக்கும் கரங்கள், மீனவ நண்பன் உள்ளிட்ட பல படங்கள் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், எம்.ஜி.ஆரின் கடைசி படமான மதுரையை மீட் சுந்தரபாண்டியன் படத்திலும் லதா நாயகியாக நடித்துள்ளார். எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்தாலும், சிவாஜியுடன் சிவகாமியின் செல்வன் என்ற படத்தில் மட்டும் இணைந்து நடித்திருந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள லதா, ரஜினிகாந்துடன் ஆயிரம் ஜென்மங்கள், கமல்ஹாசனுடன் நீயா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். கடைசியாக சரவணா ஸ்டோர் அருள் சரவணன் நடித்திருந்த லெஜண்ட் படத்தில் நடித்திருந்தார். சித்தி, வள்ளி, ரோஜா உள்ளிட்ட பல சீரியலிகளில் நடித்துள்ள நடிகை லதா தற்போது சன்டிவியின் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை லதா பல நினைவுகளை பகிர்ந்துகொண்டார். எனது முதல் நாயகன் எம்.ஜி.ஆர் அதேபோல் அவரின் கடைசி நாயகி நான் தான். சிறுவயதில் நான் பள்ளியில் எடுத்துக்கொண்ட போட்டோவை வைத்து உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அதன்பிறகு அவரின் பல படங்களில் இணைந்து நடித்தேன். சிவாஜியுடன் பல படங்கில் நடிக்க வேண்டியது ஆனால் அவருடன் சிவகாமியின் செல்வன் என்ற ஒரு படத்தில் தான் நடிக்க முடிந்தது.
தெலுங்கு மலையாள படங்களில் நடித்திருந்தாலும் இந்தியிலும் எனக்கு வாய்ப்புகள் வந்தது. ஆனால் எனக்கு எம்.ஜி.ஆர் தான் முக்கியம் அதனால் தான் நான் இந்தி பட வாய்ப்பை ஏற்கவில்லை என்று கூறியிருந்தார். இதன்பிறகு நடிகை கஸ்தூரி உங்களை பற்றி சர்ச்சை கருத்து கூறியது பற்றி கேட்டபோது, ஆமாம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கிரிக்கெட் பால் வைத்து என்னையும் எம்.ஜி.ஆர் பற்றியும் விமர்சித்திருந்தார். இதை பார்த்து நான் ஒன்றும் ரியாக்ட் செய்யவில்லை. ஆனால் எனக்கு பழக்கமானவர்கள் இதை இப்படியே விடக்கூடாது என்று சொல்லி என்னிட்டம் பேசினார்கள். ஆனால் நான் அப்படியே விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டேன்.
அதன்பிறகு கஸ்தூரியே தான் செய்தது தவறு என்று புரிந்துகொண்டு என்னிட்டம மன்னிப்பு கேட்டார். நானும் அவரை மன்னித்துவிட்டேன் என்று நடிகை லதா கூறியுள்ளார். மேலும் தற்போது யூடியூப்களில் பல பொய்யான செய்திகள் பரவி வருகிறது. நல்ல செய்திகள் தரும் சேனலும் இருக்கிறது. அதேபோல் பொய்யான செய்திகளை பரப்பும் சேனல்களும் வருகிறது. இதில் எதை நம்புவது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். வாவ் தமிழா என்ற யூடியூப் சேனலில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“