தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றுவரை மக்கள் மத்தியில் நிலைத்திருப்பவர் எம்.ஜி.ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமான எம்.ஜி.ஆர், பல தடைகளை கடந்து பெரிய உயரத்தை தொட்டவர். அதேபோல் அரசியலிலும் தனக்கென நிலையான ஒரு இடத்தை பிடித்திருந்த எம்.ஜி.ஆர் 3 முறை முதல்வராக இருந்துள்ளார்.
அரசியலில் எம்.ஜி.ஆர் வெற்றிக்கொடி நாட்ட முக்கிய காரணம் அவர் மீது ரசிகர்களும் தொண்டர்களும் வைத்திருந்த மரியாதையும் அன்பும் தான் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆரை நேசித்த ரசிகர்கள், அவருக்காக எதையும் செய்யக்கூடியவர்களாக இருந்துள்ளனர். அதற்கு உதாரணம் சொல்லும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதை கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் ஒரு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
1936-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாக எம்.ஜி.ஆர், 10 வருட போராட்டத்திற்கு பிறகு 1947-ல் நாயகனாக மாறினார். அப்போது மதுரை வீரன் என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருந்துள்ளார். கண்ணதாசன் கதை வசனத்தில் 1956-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் எம்.ஜி.ஆருடன், பானுமதி, பத்மினி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் யோகனந்த் இயக்கியிருந்தார். ஜி.ராமநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த படத்தை முதலில் இயக்கியவர் டி.ஆர்.ரகுநாத் என்பவர். இவரின் பல படங்களில் எம்.ஜி.ஆர் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார். அதனால் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்த நிலையில், எம்.ஜி.ஆரை வாடா போடா என்று சொல்லும் அளவுக்கு இவர்கள் இடையே நெருக்கம் இருந்தது. அப்போது ஒருநாள் படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர் ரசிகர்களிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது ஷாட் ரெடி ராமச்சந்திரா வா என்று இயக்குனர் ரகுநாத் கூறியுள்ளார்.
இதை கேட்ட எம்.ஜி.ஆர் ரசிகர்கள், யாருன்ணே அது உங்களை வாடா போடா என்று சொல்வது, வெளியில் வரட்டும் கல் எடுத்து அடித்துவிடுவோம் என்று கூறியுள்ளனர். அவர் எனக்கு குரு மாதிரி அப்படி எதுவும் செய்யக்கூடாது என்று சொன்ன எம்.ஜி.ஆர், ரசிகர்களை காத்திருக்க சொல்லிவிட்டு அந்த ஷாட்டில் நடித்து முடித்துள்ளார். அதன்பிறகு படப்பிடிப்பு முடிந்து மாலையில் செல்லும்போது, இயக்குனர் ரகுநாத்திடம் எம்.ஜி.ஆர், தனியாக அழைத்து பேசியுள்ளார்.
அப்போது அண்ணே மக்கள் இப்போ தெரிந்தோ தெரியாமலோ எனக்கு ஒரு இடத்தை கொடுத்துவிட்டார்கள். நீங்கள் என்னை வாடா போடா என்று அழைத்தால் அவர்கள் கோபப்படுகிறார்கள். நீங்கள் எங்காவது வெளியில் செல்லும்போது யாராவது கல் எடுத்து அடித்துவிட்டால் அது நான் சொல்லி அடித்த மாதிரி ஆகிவிடும். அதனால் பொதுவெளியில் இப்படி கூப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். மற்றபடி நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கூப்பிடுங்கள் என்று சொல்ல, நீ சொல்வது சரிதான் என்று ஏற்றுக்கொண்ட இயக்குனர் மறுநாள் வாய் தவறி ராமச்சந்திரனை கூப்பிடுங்கள் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு தனது தவறை உணர்ந்த அவர், தயாரிப்பாளரிடம் சென்று இந்த படத்தில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். ராமச்சந்திரனை வாடா போடா என்று அழைத்தே பழகி விட்டேன். இப்போது அவன் நிலை மாறிவிட்டது, ஆனால் என்னால் மாற முடியவில்லை. அதனால் இந்த படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதை தெரிந்துகொண்ட எம்.ஜி.ஆர் அவரிடம் எவ்வளவோ பேசியும் கடைசிவரை அந்த படத்தை இயக்க அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பிறகு தான் யோகானந்த் இந்த படத்தை இயக்கி முடித்துள்ளார் என்று அண்ணாதுரை கண்ணதாசன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.