தமிழ் சினிமாவில் இயக்குனர்களே கதை மற்றும் திரைக்கதையை எழுதிவிடுவதால், கதாசிரியர் அல்லது எழுத்தாளர்களுக்கு தற்போது பெரிதாக வாய்ப்பு இல்லை. ஆனால் க்ளாசிக் காலக்கட்டத்தில், இயக்குனர் கதாசிரியர் ஒருவரின் கதையை வாங்கி படமாக்கிய நிலை இருந்தது. அந்த காலக்கட்டத்தில் ஒரு கதாசிரியர் எழுதிய கதை தமிழில் தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளாததால், முதலில் கன்னடாவில் படமாக்கப்பட்டது.
கன்னடாவில் வெளியான அந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால், அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய நினைத்து அந்த கதாசிரியரை போய் பார்த்துள்ளனர். அவரும் பெருந்தன்மையாக அந்த கதையை தமிழில் படமாக்கும் உரிமையை கொடுத்துள்ளதார். தன்னை நிராகரித்த தயாரிப்பு நிறுவனம் தன்னை தேடி வந்து கதையின் உரிமையை வாங்க செய்த அந்த கதாசிரியரின் கதையில் எம்.ஜி.ஆர் நடித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த எம்.ஜி.ஆர், ஜெயந்தி பிலிம்ஸ் என்ற நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுக்கிறார். அப்போது கதையை தயார் செய்யுங்கள் என்று எம்.ஜி.ஆர் சொல்ல, அவருக்கு தகுந்த கதையை தேர்வு செய்யும் வகையில் பல கதைகளை கேட்டுள்ளார் ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை. 100-க்கு மேற்பட்ட கதைகளை கேட்டும் அவருக்கு திருப்தி இல்லாததால் இதை எம்.ஜி.ஆரிடம் சொல்ல, அவர் இந்தி மற்றும் கன்னடாவில் வெளியான ஒரு படத்தை பற்றி கூறியுள்ளார்.
இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தை பாருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால், ரீமேக் செய்யலாம் என்று சொல்ல, கனகசனை பெங்களூர் மற்றும் மும்பைக்கு தனது ஆட்களை அனுப்பி படம் பார்த்து வருமாறு கூறியுள்ளார். படத்தை பார்த்தவர்கள் இரு படமும் சூப்பர் ஹிட இந்த படத்தை தமிழில் எடுக்கலாம் என்று சொல்ல, இந்த படத்தின் கதாசிரியரை தேடியுள்ளனர். அப்போது தான் தெரிகிறது அந்த படத்திற்கு கதை எழுதியவர் ஏ.கே.வேலன் என்ற தமிழர்.
பல கதைகளை தன் கைவசம் வைத்திருந்த ஏ.கே.வேலன், ஒருமுறை ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு சென்று தன்னிடம் ஒரு கதை இருக்கிறது கேளுங்கள் என்று சொல்ல, அப்போது பட தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்த அந்நிறுவனம் இப்போது கதை கேட்கும் எண்ணம் இல்லை என்று அவரை திருப்பி அனுப்பியுள்ளனர். அதன்பிறகு அவர் தனது கதையை கன்னடாவில் பி.ஆர்.பந்தலு தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் படமாக்கியுள்ளார். எம்மி தம்மண்ணா என்ற பெயரில் 1966-ம் ஆண்டு வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அதன்பிறகு 1968-ம் ஆண்டு தெலுங்கிலும், 1969-ம் ஆண்டு இந்தியிலும் வெளியான இந்த படம் 1970-ம் ஆண்டு மாட்டுக்கார வேலன் என்ற பெயரில் தமிழில் வெளியானது. ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் பெரிய வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் முதலில் தமிழில் வெளியாக வேண்டியது தான். ஆனால் தயாரிப்பாளரின் முடிவால் கன்னடத்தில் வெளியாகி அதன்பிறகு தமிழில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பித்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“